கற்றதனால் ஆய பயனென்கொல் வாலறிவன்
நற்றாள் தொழாஅர் எனின்.
விளக்கம் ;-
‘கற்றதனால் ஆயபயன் என்’ என்றால் கற்றதனால் ஆய பயன் என்ன? என்று அர்த்தம். திருக்குறள் இயற்றப்பட்டக் காலத்தில் ‘என்ன’ என்ற சொல்லுக்கு ‘எவன்’ என்ற சொல் புழக்கத்தில் இருந்தது. அந்த ‘எவன்’ என்பதே ‘என்’ என்று ஆனது. இது ஆட்களைக் குறிக்காது.
‘கற்றதனால் ஆய பயன் என்’ என்று கேட்டதன் மூலம் கேள்வி கேட்கிற முறையில் பதில் சொல்லுகிறார் வள்ளுவர். கற்றதனால் ஆய பயன் இல்லை என்பதே இதன் பொருளாகும். எனவே இல்லை என்பதை என் என்ற வினாப்பெயர் மூலம் உறுதிப்படுத்துகிறார் வள்ளுவர்.
கல்வியின் பயன்;-
கல்வியின் பயன் – அறிவு
அறிவின் பயன் – ஒழுக்கம்
ஒழுக்கத்தின் பயன் – அன்பு
அன்பின் பயன் – அருள்
அருளின் பயன் – துறவு
துறவின் பயன் – வீடு – இதுவே கடவுளைச் சென்றடையும் நிலை.
எனவே கல்வியினாலே அறிவு வருகிறது. அறிவினாலே ஒழுக்கம் வருகிறது. நமக்கு நன்மை செய்வது ஒழுக்கம். இதனால் சமூகமும் நன்மை பெறுகிறது. ஆனால் ஒழுக்கத்தினாலே பிறரை வருத்துவது கூடாது. நாம் பின்பற்றுகிற சமயம் உலக மக்கள் அனைவரின் மீதும் அன்புகூறச் சொல்லுகிறதென்றால் அதுவே சரியான சமயப்பாதையாகும். அன்பு என்பது தொடர்புடையோர் மீது எழும்புவது. அருள் என்பது தொடர்பில்லாதவர் மீது எழும்புவது. எனவே நூலறிவின் பயன் என்பது இறைவனை அடைந்து பிறவிப்பிணி அறுத்தல் ஆகும். வீடுபேறு என்பதே பிறவிப்பிணி அறுத்தல்.
நாம் நூலறிவு கொண்டவர்கள். ஆனால் இறைவன் வாலறிவு கொண்டவன். ஆகவே இறைவனின் பாதத்தைத் தொழாவிட்டால் கல்வியினுடைய பயன் இல்லை. கல்வியினாலே மூன்று நிலை உண்டாகும்.
அவை
ஐயம் – அதுவோ, இதுவோ என்ற சந்தேகம் வருவதற்கு ஐயம் என்று பெயர்.
திரிபு – அதை இதாக நினைப்பது திரிபு.
தெளிவு – ஐயம் திரிபற கற்பதே தெளிவு.
எனவே கல்வி கற்கின்ற பொழுது இறைவனிடம் ஐயமும் திரிபும் வராமல் தெளிவைக் கொடு என்று கேட்க வேண்டும்.
இறைவனுடைய பாதத்தைத் தாள் என்று சொல்லாமல் நற்றாள் என்று சொன்னதன் காரணம் பிறவியாகிய நோய்க்கு இறைவனின் பாதம் தான் மருந்து. எனவே அதை நற்றாள் என்று சிறப்பித்துக் கூறினார்.
It was a good article, keep writing.