மலர்மிசை யேகினான் மாணடி சேர்ந்தார்
நிலமிசை நீடுவாழ் வார்.
விளக்கம்;-
மலர்மிசை என்றால் இறைவன் மலரின் கண்ணே இருப்பான் என்று அர்த்தம். இது எந்த மலர் என்று கேள்வி வருகிறது. மலர் என்று திருவள்ளுவர் எதைச் சொல்லுகிறார் என்றால் மனிதனுடைய (மனதை) உள்ளக்கமலத்தை. மனித மனம் இயல்பாகவே மென்மையானது. அன்பானது. ஆகவே, இந்த அன்பான மனதுதான் இறைவன் அமருகின்ற இடம். இறைவனை நான் எந்த ரூபத்தில் நினைத்தாலும் அந்த ரூபத்தில் இறைவன் வேகமாக வந்து நமது உள்ளத்தில் அமர்ந்து விடுவார்.
தொல்காப்பியச் சூத்திரம்;-
திருவள்ளுவர் இக்குறளிலே, ‘மலர்மிசை ஏகுகிறான்’ என்று கூறாமல் ‘ஏகினான்’ என்று இறந்த காலத்தில் கூறியுள்ளார்.
வாராக் காலத்தும் நிகழும் காலத்தும்
ஓராங்கு வரூஉம் வினைச்சொற் கிளவி
இறந்த காலத்துக் குறிப்பொடு கிளத்தல்
விரைந்த பொருள் என்மனார் புலவர்
தொல்காப்பியம் வினையியல் நூற்பா – 44
இந்நூற்பாவின் படி மூன்று காலத்திலும் நிகழும் பொருளை நிகழ்காலத்தில் தான் கூற வேண்டும். மேலும் விரைவு காரணமாகவோ, உறுதி காரணமாகவோ நிகழ்காலச் சொல்லையும் எதிர்காலச்சொல்லையும் இறந்த காலத்தில் கூறலாம்.வழுவமைதி என்று தொல்காப்பியம் இதை அனுமதிக்கிறது.
உதாரணம்;-
நான் வீட்டிற்குச் செல்வதற்காக பேருந்திலே பயணித்துக் கொண்டிருக்கிறேன். பேருந்து எனது ஊருக்கு மிக அருகில் சென்று கொண்டிருக்கிறது. பேருந்து நிறுத்தத்தில் நான் இறங்கப்போகும் பொழுது எனது தந்தை அலைபேசியில் அழைத்து எங்கே வந்து கொண்டிருக்கிறாய்? என்று கேட்டால், அப்பா இதோ வீட்டிற்க்கு வந்து விட்டேன் என்று கூறுவேன். இப்படி நான் வீட்டிற்க்கு செல்வதற்கு முன்பதாகவே வந்து விட்டேன் என்று கூறுவதே வழுவமைதி ஆகும். இப்படி நாம் அனுதின வாழ்க்கையில் இதைப் பயன்படுத்துகிறோம். இவ்வாறு, வாழ்க்கையின் போக்கையும் நோக்கையும் இலக்கணம் ஏற்றுக் கொள்கிறது.
மாண் அடி – மாட்சிமைப்பட்ட அடி.
சேர்ந்தார் – இடைவிடாது நினைத்தல்.
“மாணடி சேர்ந்தார் நிலமிசை நீடுவாழ்வார்” என்றால், இறைவனின் மாட்சிமைப்பட்ட அடிகளை இடைவிடாது தியானித்துக் கொண்டிருப்பவர் நிலமிசை நீடு இனிது வாழ்வார் என்பது பொருளாகும்.
முதற்கடவுள் யார் என்று முதல் குறளிலே சொன்னார். படிப்பதினுடைய நோக்கம் கடவுளை அடைவது என்று இரண்டாவது குறளிலே சொன்னார். மூன்றாவது குறளிலே வழிபாட்டைச் சொல்லுகிறார்.
வழிபாடு மூன்று வகைப்படும்.
- மன வழிபாடு
- வார்த்தை வழிபாடு
- செயல் வழிபாடு
எனவே, முதல் வழிபாடு மன வழிபாடு. இதையே முதலாவது கூறியிருக்கிறார்.