அதிகாரம் – 1 – குறள் – 6

இலக்கியம்

பொறிவாயில் ஐந்துஅவித்தான் பொய்தீர் ஒழுக்க

நெறிநின்றார் நீடு வாழ்வார்.

விளக்கம்;-

இக்குறள் உடலால் வழிபடுவதைக் கூறுகிறது. கடவுள்  இந்த உடம்பைக் கொடுத்து செயல்படுவதற்காக ஐம்பொறிகளைக் கொடுத்தார்.

அறிவு தரும் கருவிகள்;-

  1. மெய் – உணரும் சுவை.
  2. வாய் – பேசும் {ருசிக்கும்} சுவை.
  3. கண் – பார்க்கும் சுவை.
  4. மூக்கு – நுகரும் சுவை.
  5. செவி – கேட்கும் சுவை.

இவற்றால் அறிவைப் பெறுகிறோம். அவா {ஆசை} என்பது ஒன்றுதான். ஆனால் இந்த ஐந்து புலன்கள் வழியாகப் போகிறபடியினால் ஐந்து அவா என்கிறார் வள்ளுவர்.

உதாரணம்;-

ஒரே எண்ணெயினாலே பலவிதமான பலகாரங்களைச் செய்ய முடியும். ஆனால் எண்ணெய் ஒன்றுதான். அதைப்போலவே அவா {ஆசை} என்பதும் ஒன்றுதான்.

இந்த ஐந்து அவாவிடம்தான் மனிதன் அகப்பட்டிருக்கிறான். இதிலிருந்து வெளியே வரவேண்டுமென்றால் யார் இதிலிருந்து வெளியே வந்திருக்கிறாரோ அவரைப்பற்றினால் வெளியே வரலாம்.ஆண்டவனுக்கு அந்த ஐம்பொறி வழியாகவும் வரும் ஆசை இல்லை. ஏனென்றால் இறைவனுக்கு இந்த ஆசைகள் இயல்பிலேயே இல்லை.

பொய்தீர் ஒழுக்கநெறி என்றால் இறைவனாலே சொல்லப்பட்ட ஒழுக்க நெறிகளைப் பின்பற்றி வாழ்பவர்கள் நீடு வாழ்வார்.

இந்த நான்கு குறளிலும் இறைவனை நினைத்தல், வாழ்த்துதல், இறைநெறி நின்றவர் வீடு பெறுவர் என்பதும் கூறப்பட்டது. வழிபாடு மூன்று வகைப்படும் என்று மேற்கண்ட குறள்களில் படித்திருக்கிறோம். அந்த மூன்று வழிபாட்டிலும் மன வழிபாடே முக்கியம். ஆகவே, வள்ளுவர் மன வழிபாட்டை இரண்டு குறளிலே சொல்லியிருக்கிறார். ஒரு உயர்ந்த பொருளை கூறும்போது நேர்மறையாகவும் சொல்ல வேண்டும். எதிர் மறையாகவும் சொல்ல வேண்டும். எதிர்மறையாக சொல்லும்போது தான் அது நன்றாக அழுத்தமாக மனதிலே பதியும். மேற்கண்ட நான்கு குறளிலே கடவுளை வழிபட்டால் வீடுபேறு {முக்தி அடைதல்} அடையலாம் என்று நேர்மறையாகக் கூறியவர் இனி வரும் குறள்களில் இறைவனை வழிபடாவிட்டால் என்ன ஆகும் என்று எதிர்மறையாகக் கூறுகிறார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *