அதிகாரம் – 1 – குறள் – 9

இலக்கியம்

கோள்இல் பொறியின்குணம் இலவே எண்குணத்தான்

தாளை வணங்காத் தலை.

விளக்கம்;-

கோள்இல் பொறியின் குணம் இலவே என்றால் தத்தமக்கு உரிய புலன்களை கொள்கையில்லாத பொறிகளாலே பயனில்லையோ அதுபோல இறைவனை வணங்காத தலையினால் பயனுமில்லை.

ஐம்பொறிகள் – கண், காது, மூக்கு, செவி மெய்.

கொள்கை – கொள்ளுவது கொள்கை.

அதாவது, கண் இருக்கிறது ஆனால் பார்வை இல்லையென்றால் பார்த்தல் என்ற புலனை கொள்ளுகிற சக்தியில்லை. இதைப்போலவே நாம் ஐம்பொறிகளையும் எடுத்துக் கொள்ளவேண்டும்.

எண்குணத்தான் – எட்டுக்குணங்களை உடையவன் இறைவன்.

இறைவனின் எண்குணங்கள் ;-

  1. தன் வயத்தனாதல்
  2. தூயவுடம்பினன் ஆதல்
  3. இயற்கை உணர்வினன் ஆதல்
  4. முற்றும் உணர்தல்
  5. இயல்பாகவே பாசங்களின் நீங்குதல்
  6. பேரருள் உடைமை.
  7. முடிவில் ஆற்றலுடைமை.
  8. வரம்பில் இன்பமுடைமை.

சைவ ஆகமம் இறைவனைப் பற்றி இப்படிக் கூறுகிறது. இறைவனின் இந்த எட்டுக்குணங்களும் நமது அறிவுக்கு எட்டாத குணங்கள்.

தாள் – இறைவனின் திருவடி.

தலை – தலையாதது. தலைகளைத் தாழ்த்தி வணங்கும் போது ஐம்புலன்களாலும் வணங்குகிறோம் என்று பொருள். இறைவனை வணங்குவதற்காகவே படைக்கப்பட்டது தலை.

இக்குறளிலே உடம்பாலே வழிபடாத குற்றமும் வாக்காலே வழிபடாத குற்றமும் ஒருமித்துக்கூறப்பட்டது. எப்படியென்றால், வணங்காத தலை எப்படி பயனில்லையோ அதுபோல போற்றாத நாவும் பயனில்லை என்று நாம் கொள்ள வேண்டும் என்று பரிமேலழகர் தனது உரைக்குறிப்பிலே கூறியிருக்கிறார்.

இந்த மூன்று குறளிலும் இறைவனை நினைத்தலும் வாழ்த்தலும் வணங்கலும் செய்யாமல் இருப்பது படும் குற்றம் என்று கூறப்பட்டது.

இந்தக் கடவுள் வாழ்த்து அதிகாரத்தில் முதல் இரண்டு குறளிலே இறைவனைப் பற்றிச் சொன்னார். அடுத்த நான்கு குறளிலே இறைவனை வழிபடுவதைப் பற்றிச் சொன்னார். அடுத்த மூன்று குறளிலே வழிபாடு செய்யாவிட்டால் வரும் குற்றம் பற்றிக் கூறுகிறார். கடைசிக் குறளிலே முடிவுரை பற்றிக் கூறப்போகிறார்.  

1 thought on “அதிகாரம் – 1 – குறள் – 9

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *