இனிய உளவாக இன்னாத கூறல்
கனிஇருப்பக் காய்கவர்ந் தற்று.
விளக்கம்:-
இனிய உளவாக இன்னாத கூறல் – அறம் பயக்கும் இனிய சொற்களும் தனக்கு உளவாயிருக்க அவற்றைக் கூறாது பாவம் பயக்கும் இன்னாத சொற்களை ஒருவன் கூறுதல், கனி இருப்பக் காய் கவர்ந்தற்று – இனிய கனிகளும் தன் கைக்கண் உளவாயிருக்க அவற்றை நுகராது இன்னாத காய்களை நுகர்ந்ததனோடு ஒக்கும்.
இனியவை – அறம்.
இன்னாதவை – பாவம்.
இப்படி அறம் பயக்கும் சொற்களும் பாவம் பயக்கும் சொற்களும் நமக்குள்ளே இருக்கிறது. இதனைத் தெரிந்துகொண்டு அறம் பயக்கும் சொற்களையேப் பேச வேண்டும்.
இதை ஒரு உவமையின் மூலமாக கூறுகிறார் வள்ளுவர். இனிய கனிகள் இருக்கும்போது அதனை உண்ணாமல் இன்னாத காய்களை ஒருவன் உண்பதற்குச் சமம் என்கிறார்.
கூறல் – சொற்கள் என்று பொருளாகும்.
இனிய, இன்னாத என்று வார்த்தைகளை உவமேயமாகச் சொன்னார். இந்த உவமைக்குக் கொடுத்த அடையை இனிய கனி உளவாக என்றும் இன்னாத காய் உண்ணல் என்றும் உவமானமாக ஏற்றிக் கூறுகிறார்.
கனி, காய் என்பது பழத்தையும் காயையும் குறிக்கவில்லை. கனி என்பது அதியமான் அவ்வைக்குக் கொடுத்தக் கனியாகிய நீண்டநாள் வாழவைக்கும் கனியையேக் குறிப்பதாகும். இந்த நெல்லிக்கனியை உண்பவர் இருநூற்று நாற்பது வருடம் வாழ்வார் என்பதினால் தான் அதியமான் அவ்வைக்குக் கொடுத்தார்.
காஞ்சிரங்காய் என்று ஒரு காய் உண்டு. இது நஞ்சுக்காயாகும். இதை உண்பவருக்கு உடனடியாகச் சாவு வரும். இந்தக் காயைத்தான் இங்கே காய் என்று கூறுகிறார் என்று பரிமேலழகர் விளக்கமாக உரையெழுதியிருக்கிறார்.
இனிய சொற்கள் நம்மை வாழவைக்கும். இன்னாத சொற்கள் நம்மை அழித்துவிடவும் வல்லது. ஆகவே இனிய பொருள் நிறைந்த சொற்களைப் பேச வேண்டும். தீயச் சொற்களைப் பேசவேண்டாம் என்கிறார் வள்ளுவர்.
இந்த இரண்டு குறள்களும் தீயச்சொற்களைப் பேசுவது குற்றம் என்று கூறுகிறது.