அதிகாரம் – 11 – குறள் – 105

இலக்கியம்

உதவி வரைத்தன் றுதவி உதவி

செயப்பட்டார் சால்பின் வரைத்து.

விளக்கம்:-

உதவி உதவி வரைத்து அன்று – கைம்மாறான உதவி, காரணத்தானும் பொருளானும் காலத்தானும் ஆகிய மூவகையானும் முன் செய்த உதவியளவிற்று அன்று; உதவி செயப்பட்டார் சால்பின் வரைத்து – அதனைச் செய்வித்துக் கொண்டவர்தம் அமைதி அளவிற்று.

நாம் செய்த உதவி எவ்வளவு பெரிதாயிருந்தாலும் அதனைப் பெற்றுக் கொண்டவர் தரமில்லாதவராயிருந்தால் அந்த உதவிப் போற்றப்படுவதில்லை. ஆகவே உதவி செய்வது பெரிதில்லை. அந்த உதவியைப் பெற்றவர் அறிவுடையவராக (சால்பு – சான்றோர்) இருக்க வேண்டும்.

அவ்வையினுடைய தனிப்பாடல் மூலம் இக்குறளுக்கான விளக்கத்தைப் பார்க்கலாம்.

சிரப்பால் மணிமவுலிச் சேரமான் தன்னைச்

சுரப்புஆடு யான்கேட்கப்

ஒன்று ஈந்தான்

இரப்பவர் என்பெறினும் கொள்வர்

தாம்அறிவார் தம் கொடையின்சீர்!

அவ்வைத் தனக்கு விருந்தளித்த இல்லறத்தார் வறுமையை நீக்கவேண்டும் என்ற நல்லெண்ணத்தில் தான் அந்நாட்டு மன்னனிடம் சென்று ஒரு ஆடு வாங்கிக்கொடுத்தால் அது அவர்களுக்கு உதவும் என்று எண்ணுகிறார். உடனே அம்மன்னனிடம் சென்று “மன்னா! பால் தரும் ஆடு வேண்டும்” என்று கேட்கிறார். கொடுப்பதில் சிறந்த மன்னனான சேரன் வந்தவர் தமிழ்ப்புலவர் அவ்வை என்று அறிந்து புலவருக்குச் சாதாரண ஆட்டைக் கொடுப்பதா? பொன்னால் செய்த ஆட்டைக் கொடுப்பதேத் தமக்கும் தமிழுக்கும் பெருமை என்று பொன்னால் செய்யப்பட்ட ஆட்டைப் பரிசாகக் கொடுத்தார்.

உடனே அவ்வையும் “மன்னா உன்னாடு பொன்னாடு” என்று இருபொருள் படப் பாராட்டினார்.

“உன் நாடு பொன் நாடு” என்றும் “உன் ஆடு பொன் ஆடு” என்றும் இருபொருள் கொடுக்கும் தொடர் இத்தொடர்.

தமிழர்கள் வரிசைப்படுத்துவதில் சிறந்தவர்கள். அவர்கள் மக்களைக் கீழ்வருமாறு வரிசைப்படுத்தியுள்ளனர்.

  1. கல்விமான்
  2. அறிவாளி
  3. புலவன்
  4. கவிஞன்
  5. சான்றோன்

சால்பு (சான்றோன்) – பண்பின் உச்சம் பெற்றவர் என்றும் பெருந்தன்மை மிக்கவர். அமைதியும் மன அடக்கமும் உள்ளவர். இப்படிப்பட்டவருக்கு நாம் செய்யும் உதவி மேலானது. இவரே தங்களுக்கு உதவியவரை சிறப்பித்துக் கூறுவார்.

முதல் மூன்று குறள்களில் கூறிய மூன்று விதமான உதவிகளும் இப்படிப்பட்ட சான்றோருக்குச் செய்தால் அதனுடைய விளைவு அதிகம் என்று பரிமேலழகர் கூறுகிறார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *