அதிகாரம் -11 – குறள் – 106

இலக்கியம்

மறவற்க மாசற்றார் கேண்மை துறவற்க

துன்பத்துள் துப்பாயர் நட்பு.

விளக்கம்:-

துன்பத்துள் துப்பு ஆயார் நட்புத் துறவற்க – துன்பக் காலத்துத் தனக்குப் பற்றுக்கோடாயினாரது நட்பை விடாதொழிக; மாசு அற்றார் கேண்மை மறவற்க – அறிவொழுக்கங்களில் குற்றமற்றாரது கேண்மையை மறவாதொழிக.

நாம் துன்பப்படும் காலத்தில் நமக்கு உறுதுணையாக இருந்தவரை எக்காலத்திலும் மறக்கக்கூடாது. இதைக் கட்டளையாகவே கூறுகிறார் வள்ளுவர். இப்படிப் பெற்ற உதவியைப் போற்றவேண்டும். கடந்த இரு குறள்களிலும் பெறுகிறவனுடைய தன்மையிலும் உதவிக்குப் பெருமையுண்டு என்று கூறினார் அல்லவா?

மாசற்றார் – அறிவொழுக்கங்களில் சிறந்தவர்.

கல்விமான் என்பது அடிப்படை நிலையாகும். இதற்கு அடுத்த படியே அறிவாளி. இவர் ஒழுக்கத்திலும் சிறந்திருப்பார். இப்படிப்பட்டவரது நட்பை, உறவை மறக்கக்கூடாது. ஏனென்றால் செய்த நன்மையை மறவாதிருப்பதும் அறிவொழுக்கங்களில் சிறந்தவரது நட்பிலே நிலைத்திருப்பதும் ஒன்றொடொன்று பொருத்தமுடையது. இதை இனமாதல் என்று உரையாசியர் கூறுவர். இது தமிழினுடைய மரபாகும். உதவியை மட்டுமல்ல நட்பையும் மறக்கக்கூடாது.

அறிவு என்பதற்கு ஒளி என்றும் பொருள் உண்டு. ஒளிக்கு இரு தன்மைகள் உண்டு.

  1. ஒளி இருளை உள்வாங்காது.
  2. ஒளியை அடக்க முடியாது அது பரவும். மற்றவருக்கு வெளிச்சத்தைக் கொடுக்கும். தன்னைச் சுற்றியுள்ள இருளையும் போக்குவதோடு மற்ற இடத்திலுள்ள இருளையும் நீக்கும்.

ஆகவே நன்றியுணர்வுடன் இருப்பது இம்மைக்கு உறுதி அதனோடு மறுமைக்கும் உறுதியாகும்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *