எழுமை எழுபிறப்பும் உள்ளுவர் தங்கண்
விழுமந் துடைத்தவர் நட்பு.
விளக்கம்:-
தம்கண் விழுமம் துடைத்தவர் நட்பு – தம்கண் எய்திய துன்பத்தை நீக்கினவருடைய நட்பினை, எழுமை எழுபிறப்பும் உள்ளுவர் – எழுமையினுடைய தம் எழுவகைப் பிறப்பினும் நினைப்பவர் நல்லோர்.
இக்குறளின் விளக்கத்தைப் படிக்கும் முன்பதாக ‘எழுமை’ ‘எழுபிறப்பு’ என்பதற்கான விளக்கத்தை குறள் 62 ல் விளக்கமாக எழுதியுள்ளேன். அதனை வாசித்த பின்னர் இக்குறளுக்கான விளக்கத்தை வாசிக்கவும். https://queenofpearlcity.com/
ஒரு மனிதனுடைய அடையாளம் ஏழு பிறவிகளுக்கும் தொடரும். ஒரு தகப்பனுடைய அடையாளம் (முகம் மற்றும் குணம்) ஏழுதலைமுறை வரை தொடர்ந்து வரும். எட்டாவதில் தான் மாறும். அதற்கு அடுத்த தகப்பனுடைய சாயல் தொடர்ந்து வரும். இதையே எழுபிறப்பு என்கிறார்.
ஒருவர் துன்பம் அனுபவித்த காலத்தில் ஒருவர் வந்து அத்துன்பத்தை நீக்கினால் அப்படிப்பட்டவரது நட்பினை மேற்கூறிய ஏழுபிறப்பிலும் நினைப்பார்களாம் நல்லோர்கள். ஏனென்றால் நல்ல எண்ணங்கள் ஆழ்மனப்பதிவுகளாக அடுத்தத் தலைமுறைக்கு செல்ல வாய்ப்புண்டு.
துடைத்தவர் என்பது இறந்த காலம். இது விரைவு நோக்கிச் சொல்லப்பட்டது. இதற்கான விளக்கமும் குறள் 3 ல் உள்ளது.
நினைத்தல் என்பது துன்பத்தை நீக்கியவர் மீது வருகின்ற அன்பு ஏழுபிறவியிலும் தொடர்ந்து அன்பு பாராட்டுவதைக் குறிக்கிறது.
இந்த இரண்டு குறள்களும் நன்றி செய்தவரது நட்பை விடலாகாது என்று கூறுகிறது.