கொன்றன்ன இன்னா செயினும் அவர்செய்த
ஒன்றுநன் றுள்ளக் கெடும்.
விளக்கம்:-
கொன்று அன்ன இன்னா செயினும் – தமக்கு முன் ஒரு நன்மை செய்தவர் பின் கொன்றால் ஒத்த இன்னாதவற்றைச் செய்தாராயினும், அவர் செய்த நன்று ஒன்று உள்ளக் கெடும் – அவையெல்லாம் அவர் செய்த நன்மை ஒன்றனையும் நினைக்க இல்லையாம்.
நமக்கு நண்பராக இருப்பவர்தான் பகைவராகவும் மாற முடியும். எனவே அந்த நண்பர் ஒருநாள் நன்மை செய்திருப்பார். மறுநாள் நம்மைக் கொல்வதற்குச் சமமான இன்னா (தீமை) செய்துவிடுவார். இதனை நிச்சயமாக நம்மால் ஏற்றுக் கொள்ள முடியாதுதான்.
ஆனால் திருவள்ளுவர் முன்னர் கூறிய குறளில் என்ன கூறியுள்ளார் என்றால், உதவி பெறப்பட்டவருடைய சால்பில் தங்கியிருக்கிறது . எனவே நல்லச் சால்புடையவர்கள் தினையளவு உதவியையும் பனையளவாக எடுத்துக் கொள்வார்கள். இப்படிப்பட்டவர்களே பண்பாளர்களாவர். இந்தப் பண்பாளர்கள் தமக்குத் தீமை செய்தவர் முன்னர் செய்த நன்மையை பனையளவு பெரிதாக எடுத்துக் கொண்டால் அவர் செய்த தீமை அதற்குள்ளாக மறைந்துவிடும்.
இதுவே நன்றல்லதை மறக்கும் (திறம்) வழியாகும்.