அதிகாரம் – 12 – குறள் -115

இலக்கியம்

கேடும் பெருக்கமும் இல்லல்ல நெஞ்சத்துக்

கோடாமை சான்றோர்க் கணி.

விளக்கம்:-

கேடும் பெருக்கமும் இல் அல்ல – தீவினையால் கேடும் நல்வினையால் பெருக்கமும் யாவர்க்கும் முன்னே அமைந்து கிடந்தன; நெஞ்சத்துக் கோடாமை சான்றோர்க்கு அணி- அவ்வாற்றையறிந்து அவை காரணமாக மனத்தின்கண் கோடாமையே அறிவான் அமைந்தார்க்கு அழகாவது.

நடுவுநிலைமை தவறி ஏன் சிலர் வாழ்கின்றனர்? இக்கேள்விக்கு விடையளிக்கிறார் வள்ளுவர். நடுவுநிலைமை தவறி நடப்பவர்கள் தமது வாழ்வு தமது கையில் இருப்பதாக நினைத்துக்கொண்டுள்ளனர். அது உண்மையல்ல. மனித வாழ்க்கையில் வரும் வறுமை, செழிப்பு போன்றவை அனைத்தும் ஏற்கெனவே தீர்மானிக்கப்பட்டவையாகும். ஆகவே நமது புத்திசாலித்தனத்தினால் எதையும் மாற்றிவிடலாம் என்று நினைப்பது மடமையாகும்.

கேடு – தீயவாழ்வு.

பெருக்கம் – நல்வாழ்வு.

இவை இரண்டும் இயற்கையாக உள்ளதுதான். ஏற்கெனவே வகுக்கப்பட்டவைதான். ஆகவே நடுவுநிலைமை தவறுவது என்பது வெளியே மட்டுமல்ல நெஞ்சத்திலும் தவறக்கூடாது என்கிறார் வள்ளுவர். இதைக் கோடாமை என்றச் சொல்லாலேக் குறிக்கிறார். நடுவுநிலைமை தவறாமல் வாழ்வதேச் சான்றோர்க்கு அழகு.

நமது அனுதின வாழ்க்கையில் நாம் அனுபவிக்கும் இன்ப துன்பங்கள் அனைத்துக்கும் காரணம் நமது பிழைகள் அல்ல பழவினைகளே. ஆகவே இதை உணர்ந்து நடுவுநிலைமையோடு வாழ்வதே அழகு.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *