அதிகாரம் – 13 – குறள் – 122

இலக்கியம்

காக்க பொருளா அடக்கத்தை ஆக்கம்

அதனினூஉங் கில்லை உயிர்க்கு.

விளக்கம்:-

உயிர்க்கு அதனின் ஊங்கு ஆக்கம் இல்லை – உயிர்கட்கு அடக்கத்தின் மிக்க செல்வம் இல்லை; அடக்கத்தைப் பொருளாக் காக்க – ஆதலான் அவ்வடக்கத்தை உறுதிப் பொருளாகக் கொண்டு அழியாமல் காக்க.

முதல் ஐந்து குறள்களிலும் அடக்கத்தின் சிறப்பைப் பற்றிப் பொதுப்பட கூறியிருக்கிறார் வள்ளுவர்.

ஆக்கம் (ஆக்கப்பட்டது) – செல்வம்.

நமது மனம், மொழி, மெய்களை நமதுக் கட்டுப்பாட்டுக்குள் வைத்திருப்பது அடக்கம் என்று முதல் குறளிலே பார்த்தோம். இக்குறளிலே அந்த அடக்கத்தைச் செல்வம் என்று கூறுகிறார் வள்ளுவர். இவ்வுலகியலில் செல்வத்தை எப்படி கவனமாக பாதுகாக்கிறோம் அதுபோலவே அடக்கமாகியச் செல்வத்தை கவனமாகப் பாதுகாக்க வேண்டும்.

உடலுக்குத் தேவையான அனைத்துப் பொருள்களையும் சம்பாதித்துச் சேர்த்து வைக்கிறோம். மரணம் என்று வரும்போது இந்தப் பொருள்கள் அனைத்தையும் விட்டுவிட்டுச் செல்லத்தான் வேண்டும். நம்முடன் அது கூடவே வருவதில்லை.

ஆனால், அடக்கமாகிய பொருள் உயிர் சார்ந்த பொருளாகும். நாம் இவ்வுலகை விட்டுச் செல்லும்போதும் அது நம்முடன் கூடவே வரும். ஆகவே தான் உயிரோடு நிலைத்திருக்கும் பொருளாகிய அடக்கத்தைக் காப்பாற்றுவது நமது கடமையாகும். இதையே உயிர்க்கு அடக்கமாகிய பொருள் ஆக்கம் (செல்வம்) என்கிறார்.

சாதியொருமை:-

பலாப்பழம் இனிக்கும்.

பாகற்காய் கசக்கும்.

புளியம்பழம் புளிக்கும்.

இவ்வாக்கியங்கள் அனைத்தும் ஒருமையில் வருகிறது. ஆனால் அதன் இனத்தைச் சுட்டி நிற்கிறது. பலாப்பழங்கள் அனைத்தும் தான் இனிக்கும். பாகற்காய்கள் அனைத்தும் தான் கசக்கும். புளியம்பழங்கள் அனைத்தும் தான் புளிக்கும். இப்படி பலவற்றைச் சுட்டி நிற்கின்ற ஒன்றைச் சொல்வது சாதியொருமையாகும்.

இக்குறளில் வருகிற உயிர் என்பதும் சாதியொருமை என்ற இலக்கணத்திற்குள் அடக்கம். அடக்கமாகிய பொருள் ஒரு உயிருக்கு மட்டுமல்ல உலகில் உள்ள மனித உயிர்கள் அனைத்துக்கும் பயன் தரும். மனித உயிருக்கு மட்டுமே மனம், மொழி, மெய்களை அடக்கும் சிறப்பு இருக்கிறது.

உயிர் என்ற சொல் உயிர்களைக் குறிக்கிறது. உயிர்கள் என்ற சொல் மனித உயிர்களைக் குறித்து நிற்கிறது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *