அதிகாரம் – 13 – குறள் – 124

இலக்கியம்

நிலையின் திரியா தடங்கியான் தோற்றம்

மலையினும் மாணப் பெரிது.

விளக்கம்:-

நிலையின் திரியாது அடங்கியான் தோற்றம் – இல்வாழ்க்கையாகிய தன் நெறியின் வேறுபடாது நின்று அடங்கியவனது உயர்ச்சி, மலையினும் மாணப் பெரிது – மலையின் உயர்ச்சியினும் மிகப்பெரிது.

திரியாது அடங்குதல் – பொறிகளால் புலன்களை நுகரா நின்றே அடங்குதல், ‘மலை’ ஆகுபெயர்.

அதிகார வைப்புமுறைப் படி இக்குறளைப் படித்துப் பொருள் கொள்ளவேண்டும். இல்லறத்தான் பொறிகளை (ஐம்புலன்களை) அனுபவிக்கவும் வேண்டும். அதே நேரம் தனதுக் கட்டுப்பாட்டுக்கு மீறியும் அனுபவிக்கக் கூடாது.

ஒன்றின் பெயர் மற்றொன்றுக்கு ஆகிவருவது ஆகுபெயராகும். இக்குறளில் மலை என்ற சொல் மலையின் உயர்ச்சியைக் கூறுகிறது. எனவே இது ஆகுபெயராகும்.

செய் என்னும் வாய்ப்பாடு:-

  1. கிறு – செய்கிறான்.
  2. கின்று – செய்கின்றான்.
  3. ஆநின்று – செய்யா நின்றான்.

இவை மூன்றும் நிகழ்காலத்துக்குச் சொல்லப்பட்ட வினைச் சொற்களாகும். இக்குறளில் வரும் திரியா தடங்குதல் என்பதற்கு இவ்வாய்ப்பாட்டை வைத்துப் பொருள் கொள்ள வேண்டும்.

மனம், மொழி, மெய்களை தனதுக் கட்டுப்பாட்டுக்குள் வைத்து அடங்கி நடந்தால் நமது உயரம் மலையின் உயரத்தை விடவும் பெரிது என்கிறார் வள்ளுவர். நாம் உயருவது அல்ல. அடங்குவதே உயரம்.

17 thoughts on “அதிகாரம் – 13 – குறள் – 124

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *