ஒருமையுள் ஆமைபோல் ஐந்தடக்கல் ஆற்றின்
எழுமையும் ஏமாப் புடைத்து.
விளக்கம்:-
ஆமைபோல் ஒருமையுள் ஐந்து அடக்கல் ஆற்றின் – ஆமை போல, ஒருவன் ஒரு பிறப்பின்கண் ஐம்பொறிகளையும் அடக்க வல்லன் ஆயின், எழுமையும் ஏமாப்பு உடைத்து – அவ்வன்மை அவனுக்கு எழுபிறப்பின் கண்ணும் அரண் ஆதலை உடைத்து.
இயற்கையைக் கவனிப்பதே அறம். இதையே நமது முன்னோர்களும் செய்தார்கள். எனவே வள்ளுவரும் இக்குறளில் மெய்யடக்கத்திற்கு உதாரணமாக ஆமையை கூறுகிறார்.
ஒருமை – ஒரு பிறவி
எழுமை – ஏழு பிறவிகள்
ஏமாப்புடைத்து – உயர்ந்த வாழ்வைப் பெறுவது
ஆமை தன் பாதையில் செல்லும் போது எவரேனும் தனது அருகில் வந்தால் தனது ஐம்புலன்களையும் உள்ளிழுத்துக் கொண்டு ஒரு கல்லைப் போன்று அசையாது இருந்து கொள்ளும். இது ஆமையின் சாமர்த்தியம். இந்த ஆமையைப் போலவே நாமும் தீய காரியங்கள், தீமையான மனிதர்கள் நமது அருகில் வரும் போது ஐம்புலன்களையும் அடக்கிக் கொண்டு அமைதியாக இருக்க வேண்டும். இதையே அவ்வைப் பாட்டியும் கூறுகிறார். அந்தப் பாடல் பின்வருமாறு,
தீயாரைக் காண்பதுவும் தீதே, திரு அற்ற
தீயார் சொல் கேட்பதுவும் தீதே – தீயார்
குணங்கள் உரைப்பதுவும் தீதே; அவரோடு
இணங்கி இருப்பதுவும் தீது.
இக்குறள் இல்லறவியலில் வைக்கப்பட்டுள்ளது. எனவே இல்வாழ்வானுக்குக் கூறப்பட்டது. எனவே ஆமையின் இன்னொரு இயல்பும் இல்லறத்தானுக்குப் பொருந்தும். அது என்னவென்றால், ஆமை தேவையான நேரத்தில் ஐம்புலன்களை வெளியே நீட்டும். தீமை அருகில் வந்தால் ஐம்புலன்களையும் உள்ளிழுத்துக் கொள்ளும். அதுபோலவே இல்வாழ்வானும் தேவையான நேரத்தில் ஐம்புலன்களால் செயல்படவும் வேண்டும். தேவையற்ற நேரங்களில் அடங்கவும் வேண்டும்.
இதில் ஐந்தடக்கல் என்பது ஐயக் கருத்து. ஏனென்றால் ஐம்புலன்களையும் அடக்குவது இலகுவான காரியமல்ல கடினமான காரியம்.
நமது உயிரின் இயல்பு தீமையை விரும்பவதாகும். ஆகவேதான் தீமையை வெறுத்துவிட வேண்டும்.
இந்த மெய்யடக்கம் நமக்கு ஏழுபிறவிக்கும் நன்மையைத் தரும் என்கிறார் வள்ளுவர்.