மறப்பினும் ஓத்துக் கொளலாகும் பார்ப்பான்
பிறப்பொழுக்கங் குன்றக் கெடும்.
விளக்கம்:-
ஓத்து மறப்பினும் கொளலாகும் – கற்ற வேதத்தினை மறந்தானாயினும் அவ்வருணம் கெடாமையின் பின்னும் அஃது ஓதிக் கொள்ளலாம்; பார்ப்பான் பிறப்பு ஒழுக்கம் குன்றக் கெடும் – அந்தணனது உயர்ந்த வருணம் தன் ஒழுக்கம் குன்றக் கெடும்.
கல்வியாளராகிய பிராமண வருணத்தைச் சேர்ந்தவர் தான் கற்ற வேதத்தினை மறந்தாலும் பின்பு அதனைக் கற்றுக் கொள்ளலாம். ஆனால் ஒழுக்கம் தவறிப் போவாராயின் அவர் தாழ்ந்த வருணத்தைச் சேர்ந்தவராகி விடுவார்.
பார்ப்பான் – வேத த்தை ஒரு கண்ணாடியாக அல்லது ஒரு பொருளாக வைத்து உலகத்தைப் பார்ப்பது. எனவே பார்ப்பான் என்று பெயர் வந்தது.
எந்த வருணத்தைச் சேர்ந்தவராயினும் கல்வியை விடவும் ஒழுக்கம் பெரிது. இந்தக் குறள் பிராமணரைப் பற்றி ஏன் கூறுகிறது? என்றால் மற்ற வருணத்தை விடவும் கல்வி உயர்ந்தது. இப்படிச் சிறப்பானதை வைத்துச் சொன்னால் அது எல்லா வருணத்துக்கும் பொருந்தும்.
மறப்பினும் என்பது ஐயக்கருத்து. இதற்கு வேதம் படிக்காதே என்று பொருளல்ல. பிராணர் கல்வி கற்பதை மறக்கவும் கூடாது. அதேநேரம் ஒழுக்கத்திலும் தவறக் கூடாது.
ஓத்து – வேதம் (ஓதப்படுவதால் ஓத்து) ஓதப்படுவது (உச்சரிக்கப்படுவது) எழுதப்படுவதல்ல.
இக்குறள் கல்வியை விடவும் ஒழுக்கமே சிறந்தது என்று உறுதியாகக் கூறுகிறது.