அதிகாரம் – 14 – குறள் – 135

இலக்கியம்

அழுக்கா றுடையான்கண் ஆக்கம்போன் றில்லை

ஒழுக்க மிலான்கண் உயர்வு.

விளக்கம்:-

அழுக்காறு உடையான்கண் ஆக்கம் போன்று – அழுக்காறுடையான் மாட்டு ஆக்கமில்லாதாற்போல, ஒழுக்கம் இலான்கண் உயர்வு இல்லை – ஒழுக்கம் இல்லாதவன் மாட்டும் உயர்ச்சி இல்லை.

அழுக்காறு – பொறாமை (பிறர் ஆக்கம் கண்டு பொறாமை)

ஆக்கம் – செல்வம்

பிறரது வளர்ச்சியைக் கண்டு நமக்குப் பொறுக்கவில்லை என்றால் செல்வம் நம்மிடம் தங்காது. இந்தக் கருத்தை உவமையாகக் கூறுகிறார் வள்ளுவர். அதுபோலவே ஒழுக்கம் இல்லாதவர்களிடம் உயர்வு இருக்காது.

பரிமேலழகர் இன்னும் விரிவாகக் கூறுவதைப் பார்க்கலாம். உயர்வு என்பது ஒழுக்கமில்லாதவனுக்கு மட்டுமல்ல அவனது சுற்றத்தார்க்கும் இருக்காது. இந்தக் கருத்து உவமையில் இருந்து பெறப்படுகிறது. உவமை என்னவென்றால் பொறாமை உள்ளவர்களிடம் செல்வம் சேராது. பின்னதாக நாம் படிக்கப் போகின்ற 166 வது குறளிலே வள்ளுவர் கூறுகிறார் பொறாமையுள்ளவர்களது சுற்றம் கெடும் என்று.

மேற்கண்ட உவமையை இக்குறளிலே கூறுகிறபடியால் ஒழுக்கமில்லாதவன் மட்டுமல்ல அவனது சுற்றமும் கெடும் என்பது பெறப்படுகிறது.

2 thoughts on “அதிகாரம் – 14 – குறள் – 135

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *