நன்றிக்கு வித்தாகும் நல்லொழுக்கந் தீயொழுக்கம்
என்றும் இடும்பை தரும்.
விளக்கம்:-
நல்ஒழுக்கம் நன்றிக்கு வித்து ஆகும் – ஒருவனுக்கு நல்ஒழுக்கம் அறத்திற்குக் காரணமாய் இருமையினும் இன்பம் பயக்கும், தீயொழுக்கம் என்றும் இடும்பை தரும் – தீய ஒழுக்கம் பாவத்திற்குக் காரணமாய் இருமையினும் துன்பம் பயக்கும்.
நன்றி என்ற சொல் இங்கே அறத்தைக் குறிக்கிறது. எனவே நல்லொழுக்கம் அறத்திற்கு வித்தாகும். அதேநேரம் இம்மையிலும் மறுமையிலும் இன்பத்தையும் தரும் என்று பரிமேலழகர் எழுதுகிறார். தீய ஒழுக்கம் இடும்பை (துன்பம்) தரும்.
தீயொழுக்கம் இம்மையிலும் மறுமையிலும் துன்பத்தைத் தரும் என்று வள்ளுவர் கூறுகிறபடியால் அறமாகிய நல்லொழுக்கம் இன்பத்தையே தரும் என்று வள்ளுவர் சொல்லாமலே பெறப்படுகிறது. ஒரு கருத்து இன்னொரு கருத்தை முடித்துத் தரும்.
இக்குறள் ஒழுக்கத்தைக் கடைபிடிப்பதால் வரும் பின்விளைவுப் பற்றிக் கூறுகிறது.