அதிகாரம் – 14 – குறள் – 139

இலக்கியம்

ஒழுக்க முடையவர்க் கொல்லாவே தீய

வழுக்கியும் வாயாற் சொலல்.

விளக்கம்:-

வழுக்கியும் தீய வாயால் சொலல் – மறந்தும் தீய சொற்களைத் தம் வாயால் சொல்லும் தொழில்கள், ஒழுக்கம் உடையவர்க்கு ஒல்லா – ஒழுக்கம் உடையவர்க்கு முடியா.

ஒழுக்கமுடையவர்கள் (வழுக்கி) தவறியும் கூடத் தீய சொற்களைச் சொல்லமாட்டார்கள். பேசுவதற்கு இனிய சொற்கள் இருக்கும்போது தீய சொற்கள் எதற்கு? இதை இனியவை கூறல் அதிகாரத்தில் தெளிவாக நாம் படித்துள்ளோம். இதையே வீட்டிலும் கடைபிடிக்க வேண்டும். தீய சொற்களைப் பேசுபவர்கள் ஒழுக்கமில்லாதவர்களே.

தீய சொற்கள் என்றால் என்ன?

பிறர்க்குத் தீங்கு பயக்கும் பொய் முதலியன. அந்தணர், அரசர், வணிகர், உற்பத்தியாளர் ஆகிய நான்கு வருணத்தாரும் தனக்கு ஒவ்வாத சொற்களைப் பேசுவது தீய சொற்களாகும். உதாரணமாக அந்தணர் வாயிலிருந்து கொலை என்ற சொல் வரவே கூடாது.

தீய சொற்கள் அதாவது சொல்லக் கூடாத சொற்கள் பல. ஆகவே ஒல்லாவே என்று பன்மையில் கூறுகிறார். ஆனால் சொலல் என்று ஒருமையில் முடிப்பதால் அது சாதியொருமையாக எடுத்துக்கொள் என்று பரிமேலழகர் கூறுகிறார். சாதியொருமை பற்றியும் முந்தைய குறள்களில் தெளிவாகப் படித்துள்ளோம்.

ஒழுக்கமுள்ளவரின் வாய் தீய சொற்களை ஒருபோதும் பேசாது. எனவே வாயின் சிறப்பைக் கூறுவதற்காகவே இங்கே வாயாற் சொலல் என்கிறார் வள்ளுவர்.

1 thought on “அதிகாரம் – 14 – குறள் – 139

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *