அதிகாரம் – 14 – குறள் – 140

இலக்கியம்

உலகத்தோ டொட்ட ஒழுகல் பலகற்றுங்

கல்லா ரறிவிலா தார்.

விளக்கம்:-

உலகத்தோடு ஒட்ட ஒழுகல் கல்லார் – உலகத்தோடு பொருந்த ஒழுகதலைக் கல்லாதார், பல கற்றும் அறிவிலாதார் – பல நூல்களையும் கற்றாராயினும் அறிவிலாதார்.

உலகம் – உலகம் என்பது உயர்ந்தோர் மேற்றே. இதுவே தமிழர் பண்பாடு. உயர்ந்தவரோடு ஒத்து நட என்பதே இதன் பொருளாகும்.

ஒழுக்குவது – மேலேயிருந்து ஒழுகுவது.

உயர்ந்தோரிடம் இருந்து வருவதற்குப் பெயரே ஒழுக்கம். ஆகவே உலகத்தோடொட்ட ஒழுகுவது என்றால் உயர்ந்தவர்களோடு ஒட்டுவதாகும்.

எதற்காக உயர்ந்தவர்களைப் பின்பற்றி ஒழுக்கம் கடைபிடிக்க வேண்டும்?

எல்லா அறங்களும் எல்லாக் காலத்துக்கும் பொருந்துவன அல்ல. சில அறங்கள் ஒரு காலத்திற்குப் பொருந்தும். சில அறங்கள் சில காலத்திற்குப் பொருந்தாது. இவை நமக்குத் தெரிய வாய்ப்பு இல்லை. ஆனால் உயர்ந்தோருக்குத் தெரியும். அதனால் சிலவற்றை நீக்கி நடப்பர். புதிதாக அறங்களைப் பின்பற்றியும் நடப்பர். ஆகவே உயர்ந்தவர்களைப் பின்பற்றி நடந்தால் இதைக் கவனித்து நாமும் பின்பற்றிவிடலாம். இந்தக் காரணத்திற்காகவே உயர்ந்தோரைப் பின்பற்றி நடப்பது அவசியமாகிறது.

அறங்களிலே மாற்றம் நிகழும். அறத்தின் தன்மை, நுண்மை தெரிந்த உயர்ந்தோரே இதனை மாற்றுவார்கள்.

இப்படிப்பட்ட உயர்ந்தவர்களோடு பொருந்தி வாழத் தெரியாதவர்களையே ஒழுக்கம் இல்லாதவர்கள் என்கிறார் வள்ளுவர். இவர்கள் எவ்வளவு கல்வியைக் கற்றிருந்தாலும் அறிவில்லாதவர்களே.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *