நெடுங்கடலும் தன்நீர்மை குன்றும் தடிந்தெழிலி
தான்நல்கா தாகி விடின்.
விளக்கம்;-
நெடுங்கடல் என்றால் சாதாரண கடலல்ல. அதிகமான அளவிலே தண்ணீரைக் கொண்டது. மழை இல்லாவிட்டால் புல்லும் முளைக்காது. என்று கடந்த குறளிலே சொன்னார். இந்தக் குறளிலே நீர் நிரம்பியிருக்கிற கடலுக்கும் மழை தேவை என்கிறார். மழை இல்லாவிட்டால் கடலும் கெடும் என்கிறார்.
நீர்மை – தன்மை, இயல்பு.
எழிலி – மேகம்.
தடிந்து – முவந்து, அள்ளி.
இரண்டு வழிகளில் மேகம் தண்ணீரை எடுக்கும். ஒன்று மேகம் தண்ணீரை ஆவியாக முவந்து எடுக்கும். இரண்டாவது, இயற்கையாகவே மேகம் கடலுக்கு மிக அருகில் வந்து ஒரு பெரிய தூணைப்போல தண்ணீரை அள்ளிக்கொண்டு மேலே செல்லும். இப்படி மேகம் கடலிலுள்ள தண்ணீரை அள்ளும் போது அந்த இடத்தில் படகு இருந்தால் படகையும் மேல்நோக்கி இழுக்கும் என்கின்றனர் ஆராய்ச்சியாளர்கள். இப்படி மேகத்தால் உறிஞ்சப்பட்டத் தண்ணீரே மழையாகப் பொழிகிறது. ஆகவே, மழைக்கு மூலம் கடல். ஆனாலும் மழை பெய்யாவிட்டால் கடலின் தன்மையும் கெட்டுவிடும்.
கடலின் தன்மை கெடும் எப்படி?
மழை பெய்யாவிட்டால் கடலிலே உயிர் வாழும் மீன் இனத்தின் பெருக்கம் குறையும். விலை மதிப்பில்லாத சங்கு, முத்து போன்றவை கடலிலே விளைகிறது. இந்த முத்து விளைவதற்கும் மழைத்துளி அவசியம். முத்தை விளைவிக்கும் சிப்பியானது ஒரு குறிப்பிட்ட காலத்திலே கடலின் மேலே வந்து வாய் திறக்கும். அப்படி வாய் திறக்கும்போது அதனுள் மழைத்துளி விழ வேண்டும். அந்த மழைத்துளியும் சுவாதி நட்சத்தித்திலே விழுகிற மழைத்துளியாக இருக்க வேண்டும். அதுவே முத்தாகவும் மாறும் என்கிறது நமது பழைய தமிழ் நூல்கள்.
எனவே மழை பெய்யாவிட்டால் கடல் ஜீவராசிகள் அழிந்து விடும். நெடுங்கடலின் இயல்பும் கெட்டுவிடும் என்கிறார் வள்ளுவர்.
இரு எல்லைகளைத் தொட்டுக்கூறுகிறார் வள்ளுவர். ஒன்று புல். மற்றொன்று கடல். புல் முளைக்க வேண்டுமென்றாலும் மழை தேவை. திரளான தண்ணீரைக் கொண்ட கடலுக்கும் மழை தேவை.
இந்த ஏழு குறளிலும் உலகம் இயங்குவதற்கு மழை காரணம் என்று கூறப்பட்டது.
Nice post, worth reading. Thankful
The article was well written. Thank you for publishing this article