துறந்தார் பெருமை துணைக்கூறின் வையத்
திறந்தாரை யெண்ணிக் கொண் டற்று.
விளக்கம்;-
முதல் மூன்று குறள்களிலும் துறவிகளுடைய பெருமை பற்றிக் கூறுகிறார். துறவியினுடைய பெருமைதான் உலகிலுள்ள பெருமைகளை விட உயர்ந்தது என்று முதல் குறளிலே கூறினார். அந்தப் பெருமை எத்தனை மடங்கு உயர்ந்தது என்று இந்தக் குறளிலே கூறுகிறார்.
இந்த உலகம் தோன்றிய நாள்முதல் வாழ்ந்து மரித்தவர்களின் எண்ணிக்கையை கூற முடியுமானால், துறவிகளின் பெருமையும் அந்த அளவு உயர்ந்தது.
இறந்தவர்களின் எண்ணிக்கையை எப்படிக் கணக்கிட முடியாதோ அதேபோல துறவிகளின் பெருமைகளை நமது புத்தியாலே கணக்கிட முடியாது.
‘இறந்தாரை எண்ணிக் கொண்டல் அற்று’ என்று இருக்க வேண்டும்.
கொண்டற்று – திரிபுபட்டு நிற்கிறது இச்சொல்.
திரிபு – ஒன்றை இன்னொன்றாக மாற்றுவது.
புலவர்களுக்கும் கவிஞர்களுக்கும் ஓசைக்குள்ளே விடயத்தைக் கூறுவதற்கு அனுமதி உண்டு. எனவே தான் திருவள்ளுவர் கொண்டற்று என்று கூறுகிறார்.