இருமை வகைதெரிந் தீண்டறம் பூண்டார்
பெருமை பிறங்கிற் றுலகு.
விளக்கம்;-
இருமை வகை தெரிந்து – பிறப்பு என்பது துன்பம்; வீடு என்பது இன்பம். இந்த இரண்டினுடைய கூறுபாடுகளை ஆராய்ந்து, என்பது இதன் பொருளாகும். இருமை என்பது இரண்டு என்ற எண்ணைக் குறித்து நிற்கிறது. எண்ணின் தன்மையைக் குறித்து நிற்கவில்லை.
ஈண்டு அறம் பூண்டார் பெருமை – மேலே கூறிய பிறப்பை அறுக்க வேண்டும். அதற்கு முதலாவது பிறக்க வேண்டும். பின்பு தான் அறுக்க முடியும். அறுக்க என்ன வழி என்றால் துறவறம் மேற்கொள்ள வேண்டும்.
உலகு பிறங்கிற்று – ஏனென்றால் துறவறமே உலகத்தில் மிகவும் பெரியது.
பெருமையே பிறங்கிற் றுலகு என்று இருக்க வேண்டும் என்று கூறுகிறார் பரிமேலழகர். இது பிரிநிலை ஏகாரம்..
தருமச்சக்கரத்தை உருட்டி உலகத்தை ஆண்ட அரசர் முதலாயினோரின் பெருமையை பிரித்துக்காட்ட இங்கே பிரிநிலை ஏகாரம் வருகிறது.
ஏனென்றால் அரசர்களுடைய பெருமையைக் காட்டிலும் துறவிகளின் பெருமையே பெரியது.
பெருமையே – பிரிநிலை ஏகாரம்.
துறவிகளின் பெருமை அரசர்களின் பெருமையை விடவும் உயர்ந்தது என்று காட்டுவதற்காகவே இக்குறளை அமைத்தார் திருவள்ளுவர் என்கிறார் பரிமேலழகர். முதற்பெருமை துறவிகளுக்கே.
இம்மூன்று குறள்களிலும் துறவிகளின் பெருமை பற்றிக் கூறியிருக்கிறார்.