ஐந்தவித்தா னாற்ற லகல்விசும்பு ளார்கோமா
னிந்திரனே சாலுங் கரி.
விளக்கம்;-
ஐந்து – ஐம்பொறிகள். ஆறாவது பொறி என்று ஒன்று இல்லை. எனவே இது முற்றும்மை.
ஆற்றலகல் என்பது ஆற்றலுக்கு என்று இருக்க வேண்டும். இவை குறளுக்குள் மறைந்திருக்கிறது.
கடந்த குறளில் ஐம்புலன்களையும் அடக்குவதைப் பற்றிக் கூறினார். இந்தக் குறளில் ஐம்புலன்களையும் அடக்குவதால் என்ன பலன்? என்று கூறுகிறார்.
அகலிகை, இந்திரன் கதையை மேற்கோளாகக் காட்டிக் கூறுகிறார்.
அகலிகை முனிவருடைய மகள். அவள் பேரழகு வாய்ந்தவள். தேவர் முதலானோர் அவளுடைய பேரழகை கண்டு முனிவரிடம் வந்து பெண் கேட்கின்றனர். முனிவரோ நல்ல பொறுப்பான மனிதருக்கு தனது பெண்ணைக் கொடுக்க வேண்டுமே என்ற கவலைப்படுகிறார்.
நாரதர் அவரது வீட்டிற்கு வருகிறார். இப்படி அனைத்து தேவர்களும் பெண் கேட்டால் தக்கவரை எப்படி கண்டுபிடிப்பது என்று அவரிடம் கேட்கிறார். உடனே நாரதர் ஒரு வழி சொல்கிறார்.
இரண்டு தலையோடு பசுவை யார் பார்க்கிறாரோ அவருக்கே பெண்ணைக் கொடுப்பேன் என்ற நிபந்தனையை விதிக்கச் சொல்கிறார் நாரதர்.
உடனே தேவர்கள் அனைவரும் இரண்டு தலையோடு இருக்கும் பசுவைத் தேடிச் செல்கின்றனர்.
நாரதர் கவுதம முனிவரிடம் சென்று அகலிகையை மணந்து கொள்ளச் சொல்கிறார். கவுதம முனிவரோ அகலிகையின் தந்தை விதித்த நிபந்தனையைக் கூறுகிறார். உடனே நாரதர் அவரை பசுவின் பண்ணைக்கு அழைத்துச் செல்கிறார். அங்கே கன்றை ஈனும் பசுவைக் காட்டுகிறார். முன்னே ஒரு தலை பின்னே ஒரு தலையுள்ள பசுவைப் பார்த்தாயிற்று. அகலிகையின் தந்தையிடம் சென்று பெண் கேட்கிறார். திருமணம் நடக்கிறது. இருவரும் ஆனந்தமாக வாழ்கின்றனர்.
தேவர்களும் கவுதம முனிவரின் மனைவி என்று பிறன் மனை நோக்காமல் சென்று விடுகின்றனர். ஆனால், தேவர்களின் தலைவர் இந்திரனுக்கு ஆசை அடங்கவில்லை. சேவல் வடிவம் கொண்டு முனிவர் சந்தியாவதனம் செய்ய சென்றிருக்கும் போது அவருடைய வேடம் தரித்து அகலிகையோடு சேர்ந்துவிட்டார்.
முனிவர் வந்துவிடுகிறார். உடனே இந்திரன் பூனை வடிவம் எடுத்து வெளியே சென்றுவிடுகிறார். உன் உடலில் ஆயிரம் பெண் அங்கங்கள் உண்டாவதாக என்று சாபம் கொடுக்கிறார். அகலிகையைப் பார்த்துக் கல்லாவாய் என்று சபிக்கிறார். சாப விமோசனம் கேட்கிறாள் அகலிகை. தசரத இராமரின் திருவடிகள் பட்டவுடன் விமோசனம் பெறுவாய் என்கிறார் கவுதம முனிவர். இது புராணக் கதை.
எவ்வளவு பெரிய தலைவராயிருந்தாலும் காமம் வந்துவிட்டால் அவர்கள் மிருகத்திற்குச் சமமானவர்கள். இந்தக் கதையில் கவுதமர் சாதாரண முனிவர். ஆனால், இந்திரன் தேவர்களுக்குத் தலைவர். ஆனால் கவுதமர் சாபம் கொடுக்கிறார். இந்திரன் தலை குனிந்து நிற்கிறார்.
இதுவே முற்றும் துறந்த முனிவருடைய ஆற்றல்.
கரி – சாட்சி (இதற்கு என்ன சான்று)
இப்படி ஐம்பொறிகளையும் அடக்கியவனுக்கு கடவுளே கட்டுப்பட்டு நிற்பார்.
ஐம்புலன் அடக்கிய துறவிக்கு முன்னால் தெய்வேந்திரனும் சாபமேற்று நிற்பான்.
ஒழுக்கம் என்று வந்துவிட்டால் தெய்வமும் அதற்கு அடுத்தது தான் என்று கூறுவதற்காக வைக்கப்பட்ட குறள் இது.