அதிகாரம் – 3 – குறள் – 26

இலக்கியம்

செயற்கரிய செய்வார் பெரியர் சிறியர்

செயற்கரிய செய்கலா தார்.

விளக்கம்;-

ஒரு விடயத்தைச் சொல்கிற போது இரண்டு எல்லை தொட்டுச் சொல்ல வேண்டும். பெரியோரைச் சொல்ல வேண்டிய குறளிலே சிறியோரையும் சொல்லியிருக்கிறார்.

ஒரு விடயத்தின் பெருமை சொல்ல வந்தால் அளப்பதற்கு ஒன்று வேண்டும். அந்த அளவைச் சொல்வதற்காக செயற்கரிய செய்வார் பெரியர். சிறியர் செயற்கரிய செய்கலாதார் என்கிறார்.

முனிவர் என்றாலும் மனிதர் என்றாலும் பிறப்பிலே ஒத்தவர்கள். சிறியதை விட்டு விட்டு பெரியவற்றைச் செய்பவர் பெரியர். பெரியவற்றை விட்டு விட்டு சிறியவற்றைச் செய்பவர் சிறியர்.

செயற்கு எளியன ;-

மனதின் வழியே ஐம்பொறிகளும் எதைச் செய்ய விரும்புகிறதோ அதைச் செய்வது தான் செயற்கு எளியது. சாதாரண  மனிதர்கள் இந்த எளியவற்றையே செய்து கொண்டிருக்கின்றனர்.

செயற்கு அரியன;-

 துறவிகள் (ஞானியர்) ஐம்பொறிகளும் எதைச் செய்ய விரும்புகிறதோ அதைச் செய்யாமல் மனதை அடக்கி தடுத்து விடுவார்கள். இதைத் தடுப்பதற்கு துறவியர் யோக முயற்சியிலே ஈடுபடுவார்கள்.

செயற்கு அரியன என்பது யோக உறுப்புகளைப் பற்றிக் கொள்ளுதல். இதைப்பற்றி இன்னும் தெளிவாகப் பார்க்கலாம்.

வழிபாடு நான்கு வகைப்படும்.

  1. சரியை – புறத்திலே வழிபடுவது.
  2. கிரியை – புறவழிபாட்டை அகத்தோடு தொடர்புபடுத்துவது.
  3. யோகம் – அகத்திலே மட்டும் வழிபடுவது. சித்தர்கள் இந்த வழிபாடு செய்வார்கள்.
  4. ஞானம் – இறைவனோடு இரண்டறக் கலப்பது. இது வழிபாடாகவும் அமையும்.

இறைவனைச் சேர்வதற்கான நான்கு படிகள் இவை. இந்த நான்கையும் முப்பத்திரெண்டாகப் பிரித்திருக்கின்றனர். ஆனால், இந்தக் குறளுக்கான யோக முயற்சியை மட்டும் விரிவாகப் பார்க்கலாம். யோக முயற்சி எட்டு வகைப்படும்.

  1. இயமம்
  2. நியமம்
  3. ஆசனம்
  4. பிராணயாமம்
  5. பிரத்தியாகாரம்
  6. தாரணை
  7. தியானம்
  8. சமாதி

இந்த வரிசையில் தான் யோகத்தின் இறுதி நிலையை எய்யலாம் என்று பெரியவர்கள் நியமித்திருக்கின்றனர்.

யோகம் – மனம் ஒடுங்குவது.

முதல் நான்கும் ஆயத்த நிலைகள். அடுத்த நான்கும் தான் யோகம்.

இயமம்;-

செய்யக்கூடாதவற்றைச் செய்யாமல் விட்டுப்பழகுதல் – விதித்தன செய்தல்.

நியமம்;-

செய்யவேண்டியவற்றைச் செய்து பழகுதல் – விலகியன ஒழித்தல்.

இந்த இயம நியமங்கள் தெரியாமல் யோகத்திற்குள்ளே கால் வைக்கக் கூடாது. எனவே இயம நியமங்கள் செய்யாதவருக்கு ஆசனம் கற்றுக் கொடுக்கக் கூடாது. ஆனால், தற்காலத்தில் இதுதான் நடக்கிறது.

யோக முயற்சியிலே போகிறபோது சித்திகள் வாய்க்கும். உண்மை யோகிகள் இந்தச் சித்திகளை பயன்படுத்தமாட்டார்கள். ஏனென்றால், இந்தச் சித்திகள் பயங்கரமானவை.

யோகத்திலே ஈடுபடுவதற்கு முன்பு ஒழுக்கத்திலே நிலை நிற்க பழக வேண்டும். இதுவே யோக முயற்சி.

1 thought on “அதிகாரம் – 3 – குறள் – 26

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *