சுவையொளி யூறோசை நாற்றமென் றைந்தின்
வகைதெரிவான் கட்டே யுலகு.
விளக்கம்;-
இக்குறளிலே தத்துவ உணர்வைப் பற்றிக் கூறுகிறார் வள்ளுவர்.
சுவை, ஒளி, ஊறு, ஓசை நாற்றம் இதிலிருந்து தோன்றியதே ஐம்பூதங்கள்.
ஆகாயபூதம் – ஓசை (சப்தம்) – காது
காற்று – உணர்ச்சி (ஊறு) – மெய்
நெருப்பு – பார்வை – கண்
மண் – நாற்றம் (வாசம்) – மூக்கு
நீர் – சுவை – வாய்.
இவற்றின் வகைகளாகிய கன்மேந்திரியங்கள் (5) ஞானேந்திரியங்கள் (5) என்ற பத்து வருகிறது. மொத்தம் இருபது.
தெரிவான் கட்டே உலகு என்று சொன்னதனால் புருடன் வந்துவிட்டான்.
புருடன் எதை வைத்துத் தெரிவான்? என்ற கேள்வி வருகிறது.
அதுவே புத்தி, அகங்காரம், மனம் இவைகள் மூலமாக தெரிந்து கொள்கிறான்.
புத்தி, அகங்காரம், மனம் எதிலிருந்து தோன்றியது?
மாயை என்ற மூலப்பகுதியிலிருந்து தோன்றியது.
எனவே சுவை, ஒளி, ஊறு, ஓசை, நாற்றம்; ஐம்பூதங்கள்; கன்மேந்திரியங்கள்; ஞானேந்திரியங்கள்; புருடன்; புத்தி, அகங்காரம், மனம்; என்ற இருபத்தினான்கு தத்துவங்கள் வந்துவிட்டன.
இந்த இருபத்தினான்கு தத்துவங்களையும் அரை அடியிலே கூறிவிட்டார் என்கிறார் பரிமேலழகர்.
‘வகை தெரிவான் கட்டே உலகு’ என்றால், மேற்கூறிய இருபது தத்துவங்களையும் புருடன் புத்தி, அகங்காரம், மனம் கொண்டு அறிகிறான். இதுவே உலகம்.
மாயை – மூலப்பகுதி
புத்தி
அகங்காரம்
தன்மாத்திரைகள் (5)
மனம் புருடன்
ஞானேந்திரியங்கள் (5); கன்மேந்திரியங்கள் (5); ஐம்பூதங்கள் (5)
இதில் பகுதி, விகுதி என்று வகை தெரிவதை ‘தெரிவான்’ என்கிறார்.
உதாரணம் அப்பா மகன் என்று எடுத்துக் கொண்டால் இங்கே அப்பா என்பது பகுதி; மகன் என்பது விகுதி.
எனவே மூலப்பகுதி பகுதியாகவே இருக்கும். ஒருபோதும் விகுதியாகாது. ஆனால், புத்தி, அகங்காரம், தன்மாத்திரைகள் ஆகிய ஏழும் மூலப்பகுதியை நோக்கும் போது விகுதியாகிறது. ஞானேந்திரியங்கள், கன்மேந்திரியங்கள், ஐம்பூதங்கள் ஆகியவற்றை நோக்கும்போது பகுதியாகிறது.
புருடன் எதிலிருந்தும் தோன்றவில்லை. ஒன்றையும் தோற்றுவிக்கவுமில்லை. எனவே புருடன் பகுதியும் ஆக மாட்டார் விகுதியும் ஆக மாட்டார் இதைத்தான் தெரிவான் என்கிறார் பரிமேலழகர்..
இந்த இருபத்தைந்தையும் தெரிந்து கொள்வதே உலகைத் தெரிந்து கொள்வது. இவைகள் அனைத்தையும் தெரிந்து கொண்டவர்களின் புத்தியிலே தான் உலகம் இருக்கிறது.
முதல் மூன்று குறள்களில் துறவிகளின் பெருமை பற்றிக் கூறினார் அடுத்த நான்கு குறள்களில் அந்தப் பெருமைக்கு என்ன காரணம்? என்று கூறுகிறார். அதுவே புலனடக்கம், யோக முயற்சி, தத்துவ ஞானம் போன்றவை.