நிறைமொழி மாந்தர் பெருமை நிலத்து
மறைமொழி காட்டி விடும்.
விளக்கம்;-
புலனடக்கம், யோக முயற்சி, தத்துவ ஞானம் போன்றவற்றை உடைய உண்மைத்துறவியை எப்படிக் கண்டுபிடிப்பது என்று இக்குறளிலே கூறுகிறார்.
துறவியை அறிய வேண்டுமென்றால் பூமியிலே அவன் சொன்ன வார்த்தையின் நிறைவை வைத்தே உண்மைத் துறவியா? என்று கண்டுபிடிக்கலாம்.
நிறைமொழி மாந்தர் – துறவி.
உதாரணம்;-
சிலப்பதிகாரத்தில் கவுந்தியடிகள் என்னும் துறவி கோவலன், கண்ணகி ஆகிய இருவரையும் மதுரைக்கு அழைத்துச் செல்கிறார். கவுந்தியடிகள் தவப்பேறு பெற்ற முற்றும் துறந்த துறவியாவார். எனவேதான் செல்லும் வழியில் ஒரு காமுகனும் காமக்கிழத்தியும் அவர்கள் மூவரையும் முறைதவறிப் பேசிய போது “எம் பூங்கோதை போன்ற பெண்ணை இகழ்ந்தனர் போலும் முள் நிறைந்த காட்டிலே நீவிர் முது நரியாகுக” என்று சாபம் கொடுத்தார். உடனே அவர்கள் இருவரும் நரிகளாக மாறிவிடுவார்கள். இதுவே உண்மைத் துறவியின் வார்த்தை.
ஆன்மாவினுடைய சக்தி சூக்குமமாக வெளிப்படுவதே வார்த்தை.
தேவையில்லாதவற்றை முந்திக் கொண்டு பேசுபவர்கள் அறிவிலிகள்.
தேவை அறிந்து பேசுபவர் அறிஞர்.
தேவைக்குக் கூட பேசாதவர் ஞானி.
இப்படிப்பட்டத் துறவிகளாலே சொல்லப்பட்ட வார்த்தைகள் நிஜமாகும். ஆகவேதான் அந்த வார்த்தைகளை மந்திரமாக சேகரித்தனர்.
இவற்றை வைத்தே உண்மைத் துறவியை அடையாளம் கண்டுகொள்ள முடியும். உண்மைத் துறவிகள் கோபம் கொண்டு சொன்னாலும் அருள் நிறைந்து சொன்னாலும் அவர்கள் கூறும் வார்த்தையானது உடனடியாக பலித்துவிடும்.
மறை – வேதம் (மந்திரம்)
காட்டுதல் – பயனாலே உணர்த்துதல்.