அதிகாரம் – 3 – குறள் – 30

இலக்கியம்

அந்தண ரென்போ ரறவோர்மற் றெவ்வுயிர்க்குஞ்

செந்தண்மை பூண்டொழுக லான்.

விளக்கம்;-

ஆதி காலத்திலே இறைவனின் பெயர்தான் அந்தணர்

அந்தணர் – முற்றும் துறந்த துறவியையும் குறிக்கும். எப்படியென்றால், இந்த இறைவனோடு தங்களுடைய புலனடக்கி, யோகமுயற்சி செய்து, தத்துவ ஞானம் பெற்று, அவா அறுத்து இறைவனோடு சிலர் கலந்தனர். இப்படி கலந்துவிட்டதனால் இறைவனின் பெயராகிய அந்தணர் என்பது முற்றும் துறந்த துறவிகளுக்கு வந்தது.

ஒன்றினுடைய பெயர் மற்றொன்றுக்கு ஆகி வருவது ஆகுபெயர். எனவேதான் இறைவனின் பெயர் துறவிகளுக்கும் வந்தது.

தத்திதாந்தம் – தந்தையின் பெயரை பிள்ளைக்குச் சூட்டுவது. எனவே, உண்மை அந்தணர்கள் யாரென்றால் துறவிகள்தாம்.

ரிஷிகளுக்கும் அந்தணர் என்ற பெயர் உண்டு. அவர்களுக்குப் பிறந்த பிள்ளைகளுக்கும் அந்தணர் என்ற பெயரே நிலைத்து வந்தது. இது வழிவழியாகத் தொடர்ந்து வந்தபடியால் அந்தணர் என்பது குலப்பெயராகியது. காலம் கடந்து கடந்து வரும்போது (ரிஷித்தன்மை) அதன் தன்மை குறையும். அந்த ரிஷித்தன்மை ஏதும் இல்லாமலே போய்விட்டது.

எனவே அந்தணர் என்பது குலப்பெயரோ, ஜாதிப்பெயரோ அல்ல. துறவிகளைக் குறிக்கிறபடியால், நீத்தார் பெருமை சொல்ல வந்த திருவள்ளுவர் அந்தணர் என்ற சொல்லைக் கொண்டுவந்தார்.

துறவறத்தைப் பேணுபவரே அந்தணர்.

சிறந்ததாகியக் கருணையைக் கொண்டபடியால் அந்தணர் என்போர் அறவோர்.

எவ்வுயிர்க்கும் – உலகத்தினுடைய எல்லா உயிர்களுக்கும் துறவிகள் கருணை செய்வார்கள்.

செந்தண்மை பூண்டொழுகுதல் – குளிர்ச்சியான அருளை உடையவர்கள் அந்தணர்கள். எனவே இது காரணப்பெயர். இந்தக் கருணை என்கிற காரணம் இருந்தால் மட்டுமே அவர் அந்தணர். இங்கே நாம் கவனிக்க வேண்டியது பரிமேலழகரும் அந்தணர் குலத்தைச் சேர்ந்தவர். ஆனாலும் நடுநிலையாக நிற்கிறார். கருணை இல்லாவிட்டால் அவர் எந்தப் பரம்பரையைச் சேர்ந்தாலும் அவர் அந்தணர் அல்ல. இந்தக் குளிர்ச்சியான கருணை மற்றக்குலத்தவருக்கு இருந்தால் அவரும் அந்தணராவார்.

உதாரணம்;-

பெரியபுராணத்தில் மூன்றுபேரை மட்டுமே சேக்கிழார் அய்யர் என்கிறார். அந்த மூன்று பேரும் தாழ்த்தப்பட்டவர்கள்.

  1. கண்ணப்பன்
  2. திரு நீலகண்ட யாழ்ப்பாணர்
  3. திருநாளைப்போவார் நாயனார்.

பூண்டொழுகுதல் – பூணூலைப் பூணுதல்

பூணூலின் நோக்கம் – நான் உலகத்துக்குக் கருணை செய்கிறேன் என்கின்ற கொள்கையை விரதமாகப் பூணுகிறேன் என்பதன் அடையாளம் தான் பூணூல்.

இப்படி நான்கு வருணத்தாருக்கும் பூணூல் உண்டு என்று ஆகமம் கூறுகிறது.

பூணுதல் – விரதமாக ஏற்றுக் கொள்ளுதல். விரதமாக ஏற்றுக் கொண்டால் எக்காரணம் கொண்டும் மீறக்கூடாது.

1 thought on “அதிகாரம் – 3 – குறள் – 30

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *