அதிகாரம் – 4 – குறள் – 36

இலக்கியம்

அன்றறிவா மென்னா தறஞ்செய்க மற்றது

பொன்றுங்காற் பொன்றாத் துணை.

விளக்கம்;-

அன்றறிவாம் என்னாது அறம் செய்க – அன்றன்று செய்யக்கூடிய புண்ணிய பலன்களை அன்றே செய்து விட வேண்டும். உடம்பு நிலைக்கிற போதே அந்த வினாடி செய்வதை செய்துவிட வேண்டும் அதுவே அறம். அதுவே தர்மம்.

மரணிக்கும் போது இறைவனை நினைத்துக் கொள்ளலாம் என்றாலும் அதற்கும் சிறுவயதிலிருந்தே இறைவனை நினைக்கும் பழக்கம் இருந்திருக்க வேண்டும். இளமையிலே அந்தப் பழக்கம் இல்லையென்றால் முதுமையிலும் வராது. எனவே, இளமைக்காலத்திலே முதுமையிலே செய்து கொள்ளலாம் என்று தள்ளிப்போடக்கூடாது. அப்படி நினைக்கவும் கூடாது. ஏனென்றால் மரணம் எப்போதும் நிகழலாம். எனவே அறம் செய்வதை நாளைக்குச் செய்வோம் என்று ஒருபோதும் தள்ளிப் போடக்கூடாது.

மற்றது – அசைச்சொல். எனவே இது ஓசையை நிறைவு செய்ய வந்த சொல். இதற்குப் பொருள் கிடையாது. தேடவும் கூடாது.

பொன்றுங்கால் பொன்றாத்துணை – தர்மம் செய். அந்த தர்மம் சாகும் போது சாகாத்துணையாகக் கூடவே வரும். சாவது உடம்பு உயிரல்ல. இந்த உடம்பிலே செய்யப்படும் அத்தனை பலன்களையும் உயிர் மட்டுமே அனுபவிக்கிறது. இந்தப் பிறவியிலே நாம் செய்யும் நல்வினை, தீவினை இரண்டும் உயிரிலே பாவம், புண்ணியம் என்று பதிந்து அடுத்த பிறவியிலே இன்ப துன்பங்களாக வரும். சங்கிலிப்பின்னல் போலத் தொடர்ந்து வரும்.

3 thoughts on “அதிகாரம் – 4 – குறள் – 36

  1. ஐயா
    பொன்றுங்கா லறிவா மென்னாது அன்றுஅறஞ்செய்க மற்று பொன்றாத் துணை அது எனும் வைப்பிற்குரியது.
    தளர்ச்சியுற்ற (ஓடியாடிப் பொருளீட்டவொண்ணாத முதுமைக்) காலத்தில் யோசித்துக் கொள்வோமென்று எண்ணாமல் வாய்ப்புள்ள போதே அறஞ் செய்மின். அவ்வறம் எப்போதும் பொன்றாது துணை புரியும் என்பது கருத்து.
    தன் வாணாளிறுதி எப்போது வரும் என்பது எவர்க்கும் அறியவொண்ணாதது என்பதாலும் எய்தற்கரியது கால் என்பது கொண்டும் அறஞ்செய்வதைத் தள்ளிப் போடலாகாது என்பது (இதில்) வலியுறுத்தப்பட்டது .

  2. ஐயா
    பொன்றுங்கா லறிவா மென்னாது அன்றுஅறஞ்செய்க மற்று பொன்றாத் துணை அது. எனும் வைப்பிற்குரியது.
    தளர்ச்சியுற்ற (ஓடியாடிப் பொருளீட்டவொண்ணாத முதுமைக்) காலத்தில் யோசித்துக் கொள்வோமென்று எண்ணாமல் வாய்ப்புள்ள போதே அறஞ் செய்மின். அவ்வறம் எப்போதும் பொன்றாது துணை புரியும் என்பது கருத்து.
    தன் வாணாளிறுதி எப்போது வரும் என்பது எவர்க்கும் அறியவொண்ணாதது என்பதாலும் எய்தற்கரியது கால் என்பது கொண்டும் அறஞ்செய்வதைத் தள்ளிப் போடலாகாது என்பது (இதில்) வலியுறுத்தப்பட்டது .

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *