அறத்தா றிதுவென வேண்டா சிவிகை
பொறுத்தானோ டூர்ந்தா னிடை.
விளக்கம்;-
அறத்தின் பயன் என்ன? என்பதற்கு விடை கூறுகிறார் வள்ளுவர்.
அறத்தின் பயனைப் பிரமாணத்தின் வழியாகவே நிரூபிக்க முடியும். பிரமாணம் மூன்று வகைப்படும்.
- காட்சிப்பிரமாணம்
- அனுமானப்பிரமாணம்
- ஆகமப்பிரமாணம்
காட்சிப்பிரமாணம் – பொறி வழிக் காண்பது
அனுமானப் பிரமாணம் – ஒன்றை வைத்து இன்னொன்றை அனுமானிப்பது
ஆகமப்பிரமாணம் – உயர்ந்தோர் சொல்வதைக் கேட்பது
இந்த மூன்று பிரமாணத்தில் ஏதாவது ஒன்றில் தான் உண்மையை நிறுவ முடியும்.
அந்தக் காலத்திலே மகிழுந்து போன்றவை கிடையாது. சிவிகைகளில் தான் இளவரசி போன்ற முக்கியமானோர் செல்வர். உலகியலிலே நமது உடம்பை நாம்தான் தூக்கிச் செல்ல வேண்டும். ஆனால் சிவிகைக்குள் உட்கார்ந்திருக்கிறவரது உடம்பை மற்றவர் தூக்கிச் செல்கின்றனர். சிவிகை தூக்கிகள் தனது உடம்போடு அவரது உடம்பையும் தூக்கிச் செல்கின்றனர்.
சிவிகைக்குள் உட்கார்ந்திருக்கிறவர் தான் செய்ய வேண்டிய வேலையைச் செய்யவில்லை. இது அவர் செய்த புண்ணியம். சிவிகையைத் தூக்குகிறவர் தனக்கு இல்லாத வேலையையும் செய்கிறான். இது அவர் செய்த பாவம்.
இந்த வேறுபாடு ஏன் வந்தது?
இதுவே அறத்தின் பயன். அறத்தின் பயன் இப்படிக் காட்சிப் பிரமாணத்தாலே நிரூபிக்கப்படுகிறது. இதுவே விதி.