அதிகாரம் – 4 – குறள் – 38

இலக்கியம்

வீழ்நாள் படாஅமை நன்றாற்றின் அஃதொருவன்

வாழ்நாள் வழியடைக்குங் கல்.

விளக்கம்;-

வீழ்நாள் – அறம் செய்வதற்கு ஒரு நாளைக் கூட வீணாக்கிவிடாதே என்று கூறுகிறார் வள்ளுவர். நல்வினை தீவினையென்ற ஒன்று இருக்கும் வரைக்கும் பிறவி என்ற ஒன்று வந்துகொண்டேயிருக்கும். இதிலிருந்து தப்புவதற்கு என்ன வழி என்றால் ஒருநாள் கூட மிச்சம் வைக்காமல் அறம் செய்வோமானால் பிறவி என்ற கொடுமை வருகிற பாதையை கல்லாக நின்று அடைக்கும் அந்த அறம்.

பிறவி வேண்டாம் என்று நினைப்பவர் ஒருவருமில்லை. எல்லோருக்கும் (வாழவே) பிறக்கவே ஆசை இருக்கிறது. பிறவியின் மீது எல்லோருக்கும் விருப்பம் இருக்கிறது. வெறுப்பு வரவேண்டுமானால் ஆன்மா பழுக்க வேண்டும். ஆன்மா பழுத்துவிட்டால் பிறவியிலேயே களைப்பு வந்து விடும். களைப்பு வர வேண்டுமானால் நல்லதைச் செய்து கொண்டேயிருக்க வேண்டும். இப்படிச் செய்தால் ஒரு எல்லையிலே பிறவி வராமல் அந்த அறம் கல்லாக நின்று தடுக்கும். அந்தக் காலத்திலே நாய் போன்ற உயிரினங்கள் வராமல் இருப்பதற்காக கல்லை வைத்தே அடைப்பார்கள். எனவே கல் என்று கூறுகிறார்.

ஒரு பிறவி என்பது ஒரு வாழ்நாள். உயிர் உடம்போடு கூடி நின்று வருகிற இன்ப துன்பங்களை அனுபவிக்கும். இதுவே ஒரு உயிரினுடைய ஒரு வாழ்நாள்.

வாழ்நாள் வழியடைக்கும் கல் என்றால் பிறவி இல்லாமல் போகிறது என்று பொருள். பிறவி இல்லாமல் போவதே வீடு.

படுவது பாடு

கெடுவது கேடு

சுடுவது சூடு

விடுவது வீடு

எப்பொழுது இப்பிறவி விடுபடுகிறதோ அப்போது வீடுபேறு கிடைக்கும். எனவே அறம் என்பது வாழ்நாள் என்ற பிறவியை அடைத்துவிடுவதால் வீடுபேறு வரும்.

இந்தப் பிறவியிலே நாம் செய்யும் நல்வினை தீவினை இரண்டும் உயிரிலே பாவம் புண்ணியம் என்று பதிந்து அடுத்த பிறவியிலே இன்ப துன்பமாக வரும். இறுதியில் அந்த பிறவியும் விடுபடுகிறது. இப்படி அறம் வீடுபேற்றையும் தருகிறது.

1 thought on “அதிகாரம் – 4 – குறள் – 38

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *