அறத்தான் வருவதே யின்பமற் றெல்லாம்
புறத்த புகழு மில.
விளக்கம்;-
அறத்தால் (இல்லறத்தால்) வருவதே இன்பம் என்கிறார். அடுத்த அதிகாரம் இல்லறவியல் எனவே அதற்கு முகப்புக் கட்டுகிறார்.
அறத்தான் வருவதே இன்பம் – அறத்தோடு வருவதே இன்பம் என்று இருக்க வேண்டும். இங்கே ஒடு உருபுக்குப் பதிலாக ஆன் உருபு வருகிறது.
ஆன் உருபு ஈண்டு உடனிகழ்ச்சிக் கண் வந்தது. இப்படி வரலாமா? என்று கேட்டால் வரலாம் அதற்கு புறநானூற்றுச் செய்யுளை மேற்கோள் காட்டுகிறார் பரிமேலழகர்.
தூங்கு கையா னோங்கு நடைய என்புழிப்போல – புறநானூறு பாடல் எண் 22
தொங்குகிற துதிக்கையோடு ஓங்கு நடை போடுகிறது யானை என்பது இப்பாடலின் பொருள். இப்பாடலிலும் தூங்கு கையோடு என்ற ஒடு உருபு வராமல் தூங்கு கையான் என்ற ஆன் உருபு வருகிறது. இப்படியே அறத்தான் வருவதே என்பதை அறத்தோடு வருவதே என்று எடுத்துக் கொள்ளலாம் என்று பரிமேலழகர் விளக்குகிறார்.
அறத்தான் வருவதே இன்பம் – இல்லறத்தோடு பொருந்தி வருவதே இன்பமாவது.
மற்ற எல்லாம் புறத்த – அதனோடு பொருந்தாது வருவனமெல்லாம் இன்பமாயினுந் துன்பத்திடத்த
புகழும் இல – அதுவுமேயன்றிப் புகழும் உடையவனல்ல.
புலன்கண் மேற் செல்லும் இன்பம் – ஐம்புலன்களுக்கும் இன்பம் தரும் இல்லற வாழ்க்கையே முதன்மை (தலைமை) இன்பமாகும். ஒரு பொருளாலே ஐம்புலன்களும் இன்பம் துய்க்க வேண்டும். இதை ஒரு ஆணுக்குப் பெண்ணும் பெண்ணுக்கு ஆணும் மட்டுமே தர முடியும்.
பார்த்தால் இன்பம்
நுகர்ந்தால் இன்பம்
சுவைத்தால் இன்பம்
பேசுவதைக் கேட்டால் இன்பம்
உணர்ந்தால் (தொட்டால்) இன்பம்
ஆகவே இதுவே தலைமை இன்பமாகும்.
இனிப்பு வகைகள் உண்ணுதல் – கண்களால் பார்த்துச் சுவைத்து உண்ணும் இருபுலன்கள் அனுபவிக்கும் இன்பம்.
வாசமிகு மலர்கள் – நுகர்ந்தால் அனுபவிக்கும் இன்பம்.
மேலும் அவ்வப்போது மன உளைச்சலுக்குள்ளாகும் போது நகைச்சுவை காட்சிகளைப் பார்ப்பது துன்ப நீக்கம் ஆனாலும் இதனால் வருவது இன்பமாகாது.
எனவே ஒருவனுக்கு ஒருத்தி என்ற அறத்தோடு நின்று இல்லற வாழ்வின் மூலம் இன்பத்தையும் பெற்று புகழுடன் வாழ வேண்டும். பிறனில் விழையாமை என்ற ஒழுக்க நெறி தவறிச் சென்றும் இன்பம் அனுபவிக்கலாம். அந்த இன்பத்துக்குள்ளே துன்பமே இருக்கும். பழி வரும் . புகழ் கிடைக்காது.
ஆகவே இக்குறளில் இல்லறத்தால் வரும் இன்பமும் அதனால் வரும் புகழும் கூறப்பட்டது.