தென்புலத்தார் தெய்வம் விருந்தொக்கல் தானென்றாங்கு
ஐம்புலத்தா றோம்பல் தலை.
விளக்கம்;-
முதல் இரண்டு குறள்களிலே ஆறு கடமைகள் கூறினார். இக்குறளிலே ஐந்து கடமைகளை பற்றிக்கூறுகிறார்.
தென்புலத்தார் – பிதுர்த் தெய்வங்கள்;-
தெற்கை இடமாகக் கொண்டு இருக்கிறவர்கள். இவர்கள் யாரென்றால் சில பிதுர்த் தெய்வங்கள். பிரம்ம தேவன் உலகத்தைப் படைக்கும் போது முதலில் கொஞ்சம் பேரை படைத்துவிட்டு என்னை நீங்கள் பூசிப்பீர்களாக என்று அவர்களை நியமித்தார். இப்படிப் படைக்கப்பட்டவர்கள் நாங்கள் ஏன் பிரம்மனை பூசிக்க வேண்டும்? நம்மை நாமே பூசித்துக் கொள்வோம் என்று கூறி அவர்களையே வணங்கிக் கொண்டார்கள். உடனே பிரம்மதேவனுக்குக் கோபம் வந்துவிட்டது. நாம் நியமித்த வேலையை இவர்கள் செய்யவில்லையே என்று அவர்களை சபித்தார். உடனே அவர்கள் தவறை உணர்ந்து பிரம்மனிடம் சாப விமோசனம் கேட்டார்கள்.
அவரோ பிரம்ம புத்திரரிடம் விமோசனம் கேளுங்கள் என்று கூறிவிட்டார். பிரம்ம புத்திரரும், குழந்தைகளே உங்களை பிரம்ம தேவன் சொன்ன சாபத்திலிருந்து நீக்குகிறோம். நீங்கள் போய் தென்திசையில் இருங்கள் என்று கூறுகின்றனர். திரும்பவும் இவர்கள் பிரம்ம தேவனிடம் வந்த போது என் புத்திரராலே நீங்கள் குழந்தைகள் என்று அழைக்கப்பட்டபடியால் சந்ததியாக இருக்கக் கூடிய அந்த உயர்வுக்குக் காரணமாகுங்கள் என்று கூறி தென் திசையை அவர்கட்கு இடமாக நியமித்தார். இவர்களே பிதுர்த் தெய்வங்கள்.
நாம் வீடுகளிலே ஆண்டுதோறும் நமது முன்னோர்களை நினைக்க வேண்டும். சிறார்த்தம் முதலிய பிதுர்க்காரியம் செய்ய வேண்டும். சைவ சமயத்தின் படி நமது முன்னோர்கள் ஏதோ ஒரு பிறவியிலே இருப்பர். நாம் செய்யும் பிதுர்க் கடன்களை தென்புலத்தாராகிய பிதுர்த் தெய்வங்கள் வாங்குவர். அந்தப் புண்ணியத்தை நம் மூதாதையர்கள் எந்தப் பிறவியிலே இருந்தாலும் அந்தப் புண்ணிய பலனை அவர்களிடம் கொண்டு சேர்ப்பது இந்தப் பிதுர்த் தெய்வங்களே. இப்படிச் சேர்க்கிறபடியால் இவர்கள் பிதுர்த் தெய்வங்கள் என்றும் நம் முன்னோர் பித்ருக்கள் என்றும் அழைக்கப்படுகின்றனர்.
இன்றைய வாழ்க்கையிலும் நாம் முயற்சிக்காமலே கிடைக்கிற ஏதோ சில நன்மைகள் இப்படித்தான் நம்மை வந்து சேருகிறது. இது சைவ சமயத்தின் நம்பிக்கையாகும்.
எனவே, பிதுர்க்காரியங்களை இல்லறத்தார் கட்டாயம் செய்ய வேண்டும். அறவழியில் நின்று பார்த்தாலும் நன்றிப் பெருக்கோடு நமது முன்னோர்களை ( பெற்றோர்; தாத்தா – பாட்டி ;பூட்டன் – பூட்டி; ஓட்டன் – ஓட்டி; சேயோன் – சேயோள்; பரன் – பரை) நினைப்பதும் கடமையாகிறது.
நமது பழைய தமிழ் நூல்கள் இவ்வாறு கூறுகிறது. பிதுர்க்காரியங்கள் செய்யாத சந்ததியில் தீய குழந்தைகள் பிறப்பார்கள் என்று. அறம் இல்லாதவர்கள் பிறப்பார்களாம். இது பிதுர்க்காரியங்கள் செய்யத் தவறினால் வரும் குற்றம். நம் பரம்பரை பிழைக்காது.
தெய்வம் – குல தெய்வ வழிபாடு;-
குலதெய்வ வழிபாடு கண்டிப்பாகச் செய்ய வேண்டும். பரம்பரைக்கென்று இருக்கின்ற குலதெய்வத்தைச் சைவ சமயத்தார் வணங்காமல் இருந்தால் அந்த தெய்வம் சினக்கும்.
விருந்து;-
இருப்பதைப் பகிர்ந்து கொடுப்பது விருந்து. சமுதாய உறவு வேண்டுமென்றால் கொடுத்துப் பழக வேண்டும். கொடுக்க முடியவில்லையென்றால் வாய்ச்சொல்லாவது அருள வேண்டும். இப்படிச் செய்தால் சுற்றம் வளரும்.
கொடுத்தலும் இன்சொலும் ஆற்றின் அடுக்கிய
சுற்றத்தால் சுற்றப் படும்.
ஒக்கல் – உறவினர்கள்;-
நல்ல இல்வாழ்வான் இருக்க வேண்டுமென்றால் உறவினர்களுடைய துன்பத்திலே பங்கு கொள்ள வேண்டும். உறவினர்களைப் பேண வேண்டியது பெண்களுடைய பொறுப்பாகும். உறவு ரொம்ப முக்கியம் உறவினர்களை காத்துக் கொள் என்கிறார் வள்ளுவர்.
தான்;-
உன்னையும் பாதுகாத்துக்கொள் என்கிறார். மற்றவரைப் பேணுவதற்காகத் தன்னைப் பேணுவதும் அறம்.
என்ற என்பது விகாரமாகும். நீளமாக வந்தச் சொல்லை சுருக்குவதற்கு புலவருக்கு உரிமை உண்டு.
ஆங்கு – அசைநிலை – அசைச் சொல். ஓசையை நிறைவு செய்ய வந்தது. எனவே பொருளைத் தேடக்கூடாது.
இந்தப் பதினொரு கடமைகளையும் செய்ய ஆயத்தமாயிருப்பவர் திருமணம் செய்து கொள்ளலாம்.
Nice post, worth reading. Thankful