அறத்தாற்றின் இல்வாழ்க்கை ஆற்றின் புறத்தாற்றின்
போஒய்ப் பெறுவ தெவன்.
விளக்கம்;-
இருவிதமான பயன்கள்;-
- இம்மைப் பயன் – மனிதனுக்குக் கிடைக்கும் புகழ் இம்மைப் பயனாகும்.
- மறுமைப் பயன் – சொர்க்கம், மோட்சம் என்று இரண்டும் மறுமைப் பயனாகும்.
சொர்க்கம்;-
இன்னொரு புவனத்திலே வாழ்வது சொர்க்கம். தேவர்கள் முதலானோர் இங்கேதான் இருக்கின்றனர்.
மோட்சம்;-
இறையடியைச் சேர்வது மோட்சம். ஞானியர் இங்கேதான் இருக்கின்றனர்.
கடந்த ஐந்து குறள்களிலும் கூறிய பதினொரு கடமைகளையும் செய்து மனைவியில் அன்பு கூர்ந்து பழியஞ்சிப் பொருள் சேர்த்தால் அப்படிப்பட்ட இல்லறத்தானுக்கு இந்த இம்மையில் புகழ் கிடைக்கும். இதுவே இம்மைப்பயன். இவர் இறந்து போனால் சொர்க்கம் கிடைக்கும். தேவர்களிலே ஒருவராகச் சேர்த்துக் கொள்ளப்படுவார். இது மறுமைப் பயன்.
துறவு நோக்கி முயற்சி செய்கிறவர் (முற்றும் துறந்த முனிவரல்ல) முற்றும் துறந்த முனிவராக மாறுவதற்கு முன்பு அவர் இறந்துவிட்டால் அவருடைய மறுமைப் பயன் சொர்க்கம் தான்.
இல்லறத்தான் ஒருவனுக்கு எப்படி மறுமைப்பயன் சொர்க்கமோ அதுபோலவே துறவு நோக்கி முயற்சித்து இடையிலே இறந்து போனால் அவனுக்கும் மறுமைப் பயன் சொர்க்கம் தான்.
மிகவும் கடினப்பட்டு எல்லாவற்றையும் துறந்து எல்லாவற்றையும் விட்டவரும் சொர்க்கத்துக்குச் செல்கிறார். ஆனால், ஒன்றும் விடாமல் எல்லாவற்றையும் அனுபவித்து மனைவி மக்களோடு வாழ்ந்த இல்லறத்தானும் சொர்க்கத்துக்குச் செல்கிறார். எனவே இந்த இரண்டில் எது பெரியது என்று பார்த்தால் இல்லறத்தாரே பெரியவர். எப்படியென்றால், துறவு நோக்கி முயற்சிக்கிறவர் கடினப்பட்டு அந்த இடத்தை அடைகிறார். இல்லறத்தான் கடினப்படாமலே அந்த இடத்தை அடைகிறார். இதையே போஒய்ப் பெறுவ தெவன் என்கிறார்.
அறத்தாறு – ஆறு – வழி
அறத்தாறு – பழி அஞ்சிப் பகுத்து உண்டலும், அன்பு உடைமையும்.
புறத்தாறு – துறவு நோக்கிய முயற்சியில் இருக்கிற முயல்வார்.
It was a good article, keep writing.