அதிகாரம் – 5 – குறள் – 48

இலக்கியம்

ஆற்றின் ஒழுக்கி அறனிழுக்கா இல்வாழ்க்கை

நோற்பாரின் நோன்மை உடைத்து.

விளக்கம்;-

துறவியை துறவியாக வைத்திருக்கிறவன் இல்வாழ்வான். உலக வாழ்விலே துறவியர் தனது தேவைகளைத் தேட ஆரம்பித்தால் அந்தத் துறவியும் இல்லறத்தானாக மாறிவிடுவார்.

சிறு கதையின் மூலம் இதை விளங்கிக் கொள்வது நலம் என்று நினைக்கிறேன்.

துறவி பூனை வளர்த்த கதை

ஒரு ஊரிலே முற்றும் துறந்த துறவி இருந்தார். துறவி என்றால் கட்டிக் கொள்ள ஒரு கோவணம் துவைத்துப் போட ஒரு கோவணம் இதை மட்டுமே வைத்திருந்தார் ஒரு நாள் துவைத்தக் கோவணத்தைக் காயப் போட்டு விட்டுத் தூங்கிவிட்டார். எலி அக்கோவணத்தைத் தூக்கிக் கொண்டு போய்விட்டது. துறவிக்கோ ஒரே கவலை. எனவே ஒரு பூனை வளர்க்கலாம் என்று நினைத்து பூனைக்குட்டியை வளர்க்க ஆரம்பித்தார்.

பூனையோ சாப்பாடு கேட்டுத் துறவியை தொந்தரவு படுத்தியது. உடனே அக்கம்பக்கத்தில் சென்று பூனைக்கு என்ன கொடுக்க வேண்டும் என்று விசாரித்தார். அவர்கள் பசும்பால் கொடுக்கும்படிக் கூறினர்.

எனவே, ஊரிலேயே பெரிய செல்வந்தரிடத்தில் சென்று தன் தேவையைக் கூறினார் துறவி. செல்வந்தர் துறவிக்குக் கொடுப்பதைப் புண்ணியமாக நினைத்து நன்கு பால் கறக்கும் பசுவைத் தானமாகத் கொடுத்தார். துறவி பூனைக்குப் பால் கொடுப்பதற்காக பசுவிடம் பாலைக் கறந்தபோது நாற்பது லிட்டருக்கு மேலாகப் பால் வந்துவிட்டது.

பூனை சிறதளவு மட்டுமே பாலைக் குடித்தது. மீதமான பாலை என்ன செய்வது? என்ற கேள்வித் துறவிக்கு வந்தது. துறவி பற்று இல்லாதவர். எனவே பாலைக் கீழேக் கொட்டிவிட்டார். இதைக்கண்ட அக்கம்பக்கத்தார் மறுநாள் துறவியிடம் வந்து மீதமான பாலை எங்களுக்குத் தாருங்கள் என்று கேட்டனர். மறுநாள் பால் வாங்குவதற்காக ஒரு சிறு கூட்டமே துறவியின் வீட்டு வாசலில் நின்றது.

மக்களெல்லாரும் தனக்குள் போட்டி போட்டுக் கொண்டு துறவியிடம் இலவசமாக வாங்கக் கூடாது என்று நூறு, ஐம்பது என்று பணம் கொடுக்க ஆரம்பித்தனர். இப்படியாகத் துறவிக்கு அந்தப் பசுவை வைத்துப் பணம் பெருக ஆரம்பித்தது.

துறவி வெறும் கட்டாந்தரையில் தூங்குவது வழக்கம். ஆனால் பணம் பெருகியவுடன் கட்டில், மெத்தை என்று வாங்க ஆரம்பித்தார். பின்பு பணத்தை எப்படி பெருக்குவது என்று யோசித்து பாலில் தண்ணீர் கலந்து விற்க ஆரம்பித்தார். வசதிகள் இன்னும் பெருகியது திருமணம் பற்றி யோசிக்க ஆரம்பித்தார் துறவி.

துறவறம் போய் விட்டது. இல்லறத்தான் ஆனார் துறவி.

தனது தேவை நிறைவேறுவதற்காக துறவி சமுதாயத்திற்குள் சென்றால் துறவு போய்விடும்.

இப்போது குறளுக்குள் வரலாம். இல்லறத்தான் துறவிக்குத் தேவையான உணவு, உடை, உறையுள் ஆகிய அவசியத் தேவைகளை மட்டுமே கொடுக்க வேண்டும். இல்லறத்தான் துறவியை துறவின் வழியே நிற்கும்படித் துணை செய்ய வேண்டும்.

முயல்வார் – துறவு நோக்கி முயல்வார்

துறவு நோக்கி முயல்வாரை விடவும் இல்லறத்தான் ஏன் சிறந்தவன் என்றால் முயல்வார் முயல்வாராயிருக்க இல்லறத்தான் வழி செய்கிறான். அவரையும் துறவிலே செலுத்தித் தானும் தருமத்திலே நிற்கிறான் இல்லறத்தான்.

ஆனால் துறவியோ அவர் மட்டுமே தருமத்திலே நிற்கிறார். மற்றவரை தருமத்தில் செலுத்துவதில்லை. எனவேதான் இல்லறத்தான் முயல்வாரை விடவும் உயர்ந்தவர்.

ஆற்றின் – ஆறு – வழி

ஒழுகுதல் – ஒழுக்கம் – தொடர்ச்சியாகச் செய்தல்

ஆற்றின் ஒழுக்கில் – துறவிகளுக்கு உரிய வழியில் அவர்களை ஒழுகச் செய்வது

அறனிழுக்கா இல்வாழ்க்கை – தானும் (இல்லறத்தானும்) அறவழியில் நின்று

நோற்பார் – செய்வார் (தவம் செய்வாரை குறிக்கிறது எனவே இது ஆகுபெயர்)

துறவி தனது துன்பத்தை மட்டுமே தாங்குவார். இல்லறத்தான் தன் துன்பத்தையும் தாங்கி துறவியின் துன்பத்தையும் தாங்குகிற படியால் துறவியின் தவத்தைக் காட்டிலும் இல்லறத்தானின் தவமே உயர்ந்தது.

1 thought on “அதிகாரம் – 5 – குறள் – 48

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *