அதிகாரம் – 5 -குறள் – 49

இலக்கியம்

அறனெனப் பட்டதே இல்வாழ்க்கை அஃதும்

பிறன்பழிப்ப தில்லாயின் நன்று.

விளக்கம்;-

அறனெனப் பட்டதே இல்வாழ்க்கை – துறவு நோக்கி முயல்வாரை விடவும் இல்லறத்தான் சிறந்தவன் என்கிறார் வள்ளுவர்.

இல்லறம், துறவறம் என்று இரண்டுவகை அறங்கள் தான் உண்டு. இதில் அறனெனப்பட்டதே இல்வாழ்க்கை என்று இல்லறம் பிரிக்கப்படுவதால் இது பிரிநிலை ஏகாரம்.

எனவேதான், அஃது என்பது துறவறத்தைக் குறிக்கிறது.

பிறன் பழிப்பது – கூடாவொழுக்கம் – நல்லொழுக்கத்தோடு பொருந்தாத ஒழுக்கம்.

துறவி துறவை மேற்கொண்டுவிட்டால் பொய்மையோடு ஒத்துப் போகக் கூடாது. எனவே கூடாவொழுக்கம் நீக்கப்பட்டத் துறவறம் என்கிறார் பரிமேலழகர்.

துறவறத்துக்கு (துறவு நோக்கி முயல்வாருக்கு) ஐம்புலன்களையும் ஒடுக்க வேண்டும். இல்லறத்துக்கு ஐம்புலன்களையும் ஒடுக்க வேண்டாம். இந்த ஐம்புலன்களையும் ஒடுக்காமலேயே துறவறத்தின் பயனை இல்லறத்தான் அடைகிறான். துறவியும் ஒழுக்கத்தோடு இருந்தால் அந்த இடத்தில் ஒரு இடம் அவருக்கும் உண்டு.

இந்த நான்கு குறள்களின் மூலம் இல்வாழ்க்கை பயனுடைத்து என்று அதனைச் சிறப்பித்துக் கூறுகிறார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *