அதிகாரம் – 6 – குறள் – 51

இலக்கியம்

மனைத்தக்க மாண்புடைய ளாகித்தற் கொண்டார்

வளத்தக்காள் வாழ்க்கைத் துணை.

விளக்கம்;-

மனைவிக்கான இலட்சணத்தை இக்குறளில் வரையறை செய்கிறார். நல்ல மனைவியினிடத்தில் மனைத்தக்க மாண்பும் வளத்தக்க வாழ்வும் இருக்க வேண்டும்.

மனைத்தக்க மாண்பு;-

இல்லறத்திற்குரிய நற்பண்பு

இல்லறத்திற்குரிய நற்செய்கை

இந்த இவ்விரண்டு குணங்களும் இல்லாதவள் மனைவியல்ல. கணவருடைய வருமானத்துக்குள்ளே வாழ்கிறவளே பெண். இன்றைய உலகமயமாக்கலில் இந்தப்பண்பு காணாமல் போய்விட்டது என்று எண்ணுகிறேன் நான். ஆடம்பரத்திற்காக மற்றவர்களைப் பார்த்து நாம் வாழப் பழகுகிறோம். இது தவறு.

நற்பண்பு;-

  1. (நல்ல) துறவிகளைப் பேணுவது – இதைச் செய்தால் அவர்களுடைய வாழ்த்துதல் கிடைக்கும்.
  2. விருந்தயர்தல் – விருந்தினர்களை முகமலர்ச்சியோடு ஒரு பெண்ணால் மட்டுமே உபசரிக்க முடியும்.
  3. வறியார் மாட்டு அருளுடைமை – தொடர்பில்லாதவர் மேலே வருவது அருள். எனவே அன்பு என்று சொல்லவில்லை. வறியவருக்க உதவ வேண்டும் என்று கூறுகிறார்.

நற்செய்கை;-

பெண்கள் உணர்வு மிக்கவர்கள். அறிவு குறைந்தவர்கள். ஒழுக்கம் அறிவு குறைந்தவரிடமே இருக்கும். விரதம் என்றால் அதில் நிலைப்பாட்டில் இருப்பவர்கள் பெண்கள். இதையே நற்செய்கை என்று கூறுகிறார்.

அட்டில் தொழில் வன்மை;-

நல்ல மனைவியாக இருக்க வேண்டுமென்றால் நன்றாகச் சமைக்கத் தெரிந்திருக்க வேண்டும். சமையல் செய்யச் செய்யத் தான் பயிற்சி வரும். சமையலால் மட்டுமே கணவரைக் கட்டிப்போட முடியும்.

ஒப்புரவு செய்தல்;-

ஈகை என்பது தனிமனிதனுக்குச் செய்கிற கொடை. ஒப்புரவு என்பது ஊருக்குச் செய்கிற கொடை. உலகத்துக்காக கணவர் செயல்படுவதற்கு உதவி செய்வது ஒப்புரவு. ஊருக்குச் செய்கிற நல்விடயங்களில் பெண்கள் முன்னின்று உழைக்க வேண்டும்.

அழகு கொஞ்ச நாள்களில் பழகிவிடும்.

கல்வி – ஒழுக்கத்துக்கு உதவாத கல்வி கல்வியேயல்ல.

சீதனத்தாலும் பிரயோசனமில்லை.

அந்தக் காலத்திலே ஒரு பெண்ணைத் தீபமேற்றச் சொல்லி அவள் எத்தனைத் தீக்குச்சிகளை செலவழிக்கிறாள் என்று சோதிப்பார்களாம்.

ஒரு சொம்பு தண்ணீர் கொடுத்தால் முகம், கை, கால் கழுவி மீதியும் வைக்க வேண்டுமாம். இவைகளை வைத்தே பெண்களை அளவீடு செய்வார்களாம்.

வெளித்தோற்றம் போய்விடும். குணம் மட்டுமே நிற்கும் அழகும் கல்வியும் இருபது சதவீதம் தான்.

மேற்கண்ட திருக்குறளைப் படித்து வாழ்க்கையாக்கவும் விளைவோமாக.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *