அதிகாரம் – 6 – குறள் – 52

இலக்கியம்

மனைமாட்சி யில்லாள்க ணில்லாயின் வாழ்க்கை

யெனைமாட்சித் தாயினு மில்.

விளக்கம்;-

முதல் குறளில் கூறியதை வலியுறுத்துகிறார். மனைத்தக்க மாண்பும் வளத்தக்க வாழ்வும் ஒரு பெண்ணிடம் இல்லையென்றால் என்ன செய்வது? மனைவி இப்படி வாய்த்துவிட்டால் அந்தக் கணவரிடம் என்ன செல்வ வளம் இருந்தும் ஒன்றுமில்லை.

ஒரு பெண்ணினுடைய இழிவு கண்டு தமிழ் புலவர் ஔவையார் பாடிய பாடல்.

இருந்து முகம் திருத்தி ஈரோடு பேன்வாங்கி

விருந்து வந்த தென்று விளம்ப – வருந்தி

ஆடினாள், பாடினாள், ஆடிப் பழமுறத்தால்

சாடினாள் ஓடோடத்தான்.

ஔவைப்பாட்டியின் தனிப்பாடலில் விவரிக்கப்பட்டுள்ள இந்தச் சுவையான கதையைப் பார்க்கலாம்.

ஔவையார் ஒரு கிராமத்திற்குச் செல்கிறார். கிணற்றண்டையிலே குளித்துக் கொண்டிருக்கும் ஒருவனிடம் இன்று உன் வீட்டிற்கு விருந்துக்கு வரலாமா? என்று கேட்கிறார். அந்த மனிதனும் மறுக்க முடியாமல் வீட்டிற்கு அழைத்துச் செல்கிறார்.

ஔவைப்பாட்டியை வெளியே உட்கார வைத்துவிட்டு உள்ளே சென்று தாழ்ப்பாளிட்டுக் கொள்கிறான். ஔவையோ உள்ளே என்ன நடக்கிறது? என்று மெதுவாக எட்டிப்பார்க்கிறார்.

வீட்டிற்குள்ளே அவன் மனைவி முறத்திலே அரிசி புடைத்துக் கொண்டிருக்கிறாள். விருந்து வந்திருக்கிறது என்று சொல்ல அச்சம் அந்த மனிதனுக்கு. எனவேதான் ஈரோடு பேன் பார்த்து முகம் திருத்தி தலை அலங்காரம் செய்கிறான். இங்கே வினைத்தொகையை பயன்படுத்துகிறார் ஔவை. மூன்று காலத்தையும் குறிப்பதே வினைத்தொகை.

ஈரோடும் பேன் என்கிறார்.

ஓடிய பேன் (இறந்த காலம்)

ஓடுகின்ற பேன் (நிகழ் காலம்)

ஓடும் பேன் (எதிர் காலம்)

அதாவது, தரித்திரம் பிடித்தவள் தலையிலே பேன் எப்போதும் ஓடும் என்கிறார்.

விருந்து வந்ததென்று சொன்னவுடனே அவன் மனைவி எழுந்தாள். சேலை கொசுவத்தைச் சொருகினாள். உனக்குச் சோறு போடுவது போதாதா? விருந்து வேறு போட வேண்டுமா? என்று விரட்டி விரட்டி முறத்தாலே அடிக்கிறாள். பின்பு இன்றைக்கு ஒருநாள் மட்டும் தான் இனிமேல் இப்படி யாரையும் கூட்டிக் கொண்டு வரக்கூடாது என்று அதட்டிவிட்டு வெளியே வருகிறார்கள் இருவரும். ஔவையோ இவைகள் அனைத்தையும் கேட்டும் கேளாதவர் போல இருக்கிறார்.

அந்த மனிதன் பாட்டியை அழைக்கிறான். பாட்டி உடனே, உள்ளே என்ன சத்தமாகக் கேட்டதே? என்கிறார். அதெல்லாம் ஒன்றுமில்லை அரிசி புடைத்தாள் மனைவி என்று கூறி சமாளிக்கிறான். (இவன் தான் அந்த அரிசியோ)

ஔவை ஒரு முடிவைப் பார்த்துவிட வேண்டும் என்று உள்ளே செல்கிறார். இருவரையும் உட்கார வைத்து இலையை நின்று கொண்டே போடுகிறாள் அந்த மனையாள். இருவரும் கையில் (catch) பிடித்துக் கொண்டனர். இலையைச் சரியாகப் போட்ட பின்னர் சாதத்தையும் டொக்கென்று வைக்கிறாள். இலை கிழிந்து போயிற்று. ஔவை பல்லைக்கடித்துக் கொண்டு பொறுத்துக் கொள்கிறார். பின்பு குழம்பையும் நின்றபடியே சாதத்தில் விடுகிறாள் அந்தச் சூர்ப்பனகை. குழம்பு இருவர் மேலும் தெறித்தது. ஔவைப் பாட்டிக்குச் சகிக்கவில்லை.

பின்வருமாறு பாடுகிறார்.

காணக் கண் கூசுதே கையெடுக்க நாணுதே

மானொக்க வாய்திறக்க மாட்டதே – வீணுக்கென்

என்பெல்லாம் பற்றி எரிகின்ற தையையோ

அன்பில்லாள் இட்ட அமுது.

பிரம்மன் மீதே ஔவைக்குக் கோபம் வந்துவிட்டது.

அற்றதலை போக அறாத தலை நான்கினையும்

பற்றித் திருகிப் பறியேனோ? – வற்றும்

மரம் அனையாட்கு இந்த மகனை வகுத்த

பிரமனையான் காணப்பெறின்.

பிரம்மனுக்கு இருந்த ஐந்து தலைகளில் ஒன்றை சிவபெருமான் திருகி எடுத்துவிட்டாராம். ஆனால் நானோ மீதி நான்கு தலைகளையும் பிடுங்கி இருப்பேன் என்று கோபப்படுகிறார் ஔவை.

அந்த மனிதனைப் பார்த்து மறுபடியும் பாடுகிறார். அப்பாடல் பின்வருமாறு,

பத்தாவுக்கு ஏற்ற பதிவிரதை உண்டானால்

எத்தாலும் கூடி இருக்கலாம் – சற்றேனும்

ஏறுமாறாக இருப்பாளே ஆமாயின் கூறாமல் சந்நியாசம் கொள்.

சண்டாளி சூர்ப்பனகை தாடகையைப் போல்

வடிவு கொண்டாளைப் பெண்டு என்று கொண்டாயே – தொண்டர்

செருப்படிதான் செல்லா உன் செல்வமென்ன செல்வம்

நெருப்பிலே வீழ்ந்திடுதல் நேர்.

இனி இவளோடு நீ வாழ வேண்டாம், என்னோடு வந்துவிடு என்று அந்த மனிதனை அழைக்கிறாள் பாட்டி.

குறள் விளக்கம்;-

ஒரு மனிதனுக்கு எவ்வளவு செல்வம் இருந்தாலும் (பொருள்மாட்சி) மனைமாட்சி அமையவில்லை என்றால் ஒன்றுமில்லை. ஒரு ஆடவனுடைய பெருமை பெண்ணின் பண்பிலே அடக்கம். மனதிலே பதிய வைப்பதற்காக திரும்பவும் அழுத்தமாகக் கூறுகிறார்.

இல் என்பதற்கு பயனில்லை என்று பொருள். நல்ல மனைவி இல்லையென்றால் அந்த மனிதனிடத்தில் எவ்வளவு பொருள் இருந்தாலும் பயனில்லை தான்.

1 thought on “அதிகாரம் – 6 – குறள் – 52

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *