இல்லதென் இல்லவள் மாண்பானால் உள்ளதென்
இல்லவள் மாணாக் கடை.
விளக்கம்;-
கடந்த குறளில் கூறியதையே அழுத்தமாகக் கூறுகிறார். முதல் குறளில் கூறிய நற்குண நற்செய்கையோடு ஒரு மனைவி அமைந்துவிட்டால் அந்த மனிதனுக்கு இல்லாதது எது? மனைவி சரியாக அமையப்பெற்ற கணவன் ஒன்றுமில்லாதவன் என்றாலும் எல்லாம் உள்ளவன் தான். இதையே மாற்றியும் கூறுகிறார். எல்லா செல்வ வளங்களும் இருந்தும் மனைவி மட்டும் அமையவில்லையென்றால் உள்ளது என்ன? என்று கேட்கிறார் வள்ளுவர்.
குணி – பொருள்
குணத்தைக் கொண்ட பொருள் குணி. அந்தக் குணியில் தங்கியிருப்பது குணம்.
இல்லதென் இல்லவள் மாண்புடையவள் ஆனால் என்றே குறள் இருக்க வேண்டும். ஆனால் குறளிலே உடையவள் என்ற வார்த்தை இல்லை. எனவே இங்கே குணம் குணியாக உருவகிக்கப்படுகிறது.
மாண்பு என்பது குணம்
மனைவி என்பது குணி
எனவே மனைவியையே மாண்பாக உருவகிக்கிறபடியால் குணம் குணியாக மாறிவிட்டது.
இவ்விரண்டு பாட்டாலும் இல்வாழ்க்கைக்குத் தேவை இல்லாளின் மாட்சியே என்பது பெறப்பட்டது.
It was a good article, keep writing.