பெண்ணின் பெருந்தக்க யாவுள கற்பென்னும்
திண்மை உண்டாகப் பெறின்.
விளக்கம்;-
கற்பு என்றால் அது பெண்ணுக்குரிய விஷயம். எப்படியென்றால் திருமணமான பிறகு கணவரைத் தவிர வேறு யாரையும் நினையாமல் உறுதியோடு வாழ்ந்துவிட வேண்டும். கம்ப இராமாயாணம் கூறும் இராமனும் சீதையும் ஒருவரை ஒருவர் நோக்கிய பின் சீதை இவர்தான் என் மணாளன் என்று அந்த விநாடியிலேயே உறுதி கொண்டாள். அந்த உறுதியோடு வாழ்ந்தாள். அதுவே கற்பு.
பெண்ணானவள் கற்பு தவறினால் குடும்பக்கட்டமைப்பு உடையும். ஏனென்றால், குழந்தையைப் பெற்றெடுக்கக் கூடிய ஆற்றலை இயற்கை அவளுக்கே மட்டுமே கொடுத்திருக்கிறது. எனவே பெண் கற்பு நெறி தவறும் போது குழந்தை யாருடையது என்ற கேள்வி வந்து குடும்பம் உடைந்து சமுதாயமும் உடைகிறது. அதனாலே பெண்ணுக்கு மட்டுமே கற்பு நெறி முக்கியப்படுத்தப்பட்டுள்ளது.
பெண் அவளாக உறுதி பூணுவதே கற்பு. கல் போல உறுதியாக நீ நிற்பதற்கு நான் துணையாக இருப்பேன் என்று சொல்வதே அம்மியிலே அவளது காலை வைத்து அதற்கு அடையாளமாக மெட்டி போடுவது. வேறு எந்த உலோகமானாலும் வளைந்து கொடுக்கும். ஆனால் கல் வளைந்து கொடுக்காது. நிற்கும் வரைதான் நிற்கும். இல்லாவிட்டால் இரண்டாக உடைந்து போகும்.
கற்பு – கலங்காத நிலைமை.
ஒரு மனிதன் அறம், பொருள், இன்பமாகிய மூன்றையும் வெற்றியோடு அனுபவிக்க வேண்டுமானால் அதற்கு கற்புடைய மனைவி மட்டுமே துணை செய்ய முடியும். வேறு யாராலும் அதைச் செய்ய முடியாது.
இதுவே இந்தக் குறளின் விளக்கமாகும்.