தெய்வந் தொழாஅள் கொழுநற் றொழுதெழுவாள்
பெய்யெனப் பெய்யும் மழை.
விளக்கம்;-
பெண்(மனைவி) தெய்வத்தைக் கூடக் கூப்பிடமாட்டாள் தன் கணவனையே தொழுவாள். பெண் உணர்வு சார்ந்து இயங்குபவள். எனவே தன்னை அடக்கி ஒடுக்கி ஒருநிலைப்படுவாளானால் இயற்கை அவளுக்குக் கட்டுப்பட்டு நிற்கும். ஏவல் செய்யும். ஆண்கள் அறிவு சார்ந்து இயங்குவர். எனவே அவர்களால் ஒருநிலைப்படுத்த முடியாது. புத்தி அதிகமாகும் போது உணர்வு குன்றும். உணர்வு குன்றும் போது ஒழுக்கம் பேண முடியாது. அந்த இடத்தில் பெண்தான் ஆணைக் காப்பாற்ற முடியும். இதைப் பற்றி அடுத்தக் குறளில் கூறுகிறார்.
- தன்னில் மாற்றம் நிகழ்த்துவது
- ஒருமைப்படுத்துவது
- இயற்கையோடு ஒன்றுவது
இவைகள் அனைத்தையும் பெண்ணால் மட்டுமே செய்ய முடியும். இப்படிப்பட்டப் பெண்ணுக்கே இயற்கையும் கட்டுப்படும். பஞ்சபூதங்கள் ஏவல் செய்யும்.
உதாரணம்;-
- கம்ப இராமாயாணத்தில் சீதை
- சிலப்பதிகாரத்தில் கண்ணகி
- மகாபாரதத்தில் பாஞ்சாலி
இந்த இலக்கியங்கள் காட்டும் இப்பெண்களுக்கு இயற்கை கட்டுப்பட்டது. அவர்களது கற்புநெறி அந்த அளவுக்கு உயர்ந்ததாயிருந்தது.
மனைவிக்குக் கணவனே தெய்வம். ஒருவரால் மற்றொருவருக்குச் சக்தி கிடைக்கிறது. இது இறைவனின் படைப்பின் இரகசியம்.
தொழாநின்று – தொழுது
நிகழ்கால முடிவைச் சொல்கிற போது ஆநின்று, கின்று, கிறு என்ற மூன்று இலக்கணம் வரும்.
கின்று – தொழுகின்றேன்
கிறு – தொழுகிறேன்
ஆநின்று – தொழாநின்றேன்
இது பழையகாலத்தில் பிரயோகத்தில் இருந்தது. ஆகவே தொழாநின்று என்றால் தொழுது என்றே பொருள்.
பரிமேலழகர் உரைக்குறிப்பு தரும் ஒரு முக்கியமான செய்தி;-
இருளும் ஒளியும் சந்திக்கும் நேரம்தான் சந்தி. இது இரண்டு வகைப்படும். ஒன்று இருள் போய் ஒளி வருகின்ற சந்தி. மற்றொன்று ஒளி போய் இருள் வருகின்ற சந்தி. இதிலே இருள் போய் ஒளி வருகின்ற சந்தி உயர்ந்த சாத்வீக குணத்தை உண்டாக்கும். எனவேதான் இந்த அதிகாலைப்பொழுது கல்விக்கும் வழிபாட்டிற்கும் உரியது. இதுவே சந்தியாவந்தனம். இந்த விடிகாலையில் பெண் தன் கணவனைத் தொழ வேண்டும்.
ஆகவே தான் திருவள்ளுவர் மட்டுமல்ல அத்தனைப்புலவர்களும் பெண்ணுக்கு நினைத்துப் பார்க்க முடியாத சக்தியைத் தருகின்ற ஒன்றாக ஒழுக்கம் அமையும் என்றபடியால் தான் ஒழுக்கத்தை வலியுறுத்திக் கூறியிருக்கின்றனர்.
இக்குறளில் பெண்ணின் கற்பு சிறப்பித்துக் கூறப்பட்டது.