சிறைகாக்கும் காப்பெவன் செய்யும் மகளிர்
நிறைகாக்கும் காப்பே தலை.
விளக்கம்;-
பெண்ணை வீட்டிற்குள் வைத்து பூட்டிவைத்தால் தான் அவளது கற்பைக் காக்க முடியுமா? என்ற கேள்விக்கு விடையளிக்கிறார் வள்ளுவர்.
இதற்கு நமது பாரதியாரின் பாடலையும் இணைத்து இக்குறளுக்கான விளக்கத்தைப் பார்க்கலாம்.
நிலத்தின் தன்மை பயிருக்குள தாகுமாம்;
நீசத்தொண்டும் மடமையும் கொண்டதாய்
தலத்தில் மாண்புயிர் மக்களைப் பெற்றிடல்
சால வேயரி தாவதொர் செய்தியாம்;
குலத்து மாதர்க்குக் கற்பியல் பாகுமாம்;
கொடுமை செய்தும் அறிவை யழித்துமந்
நலத்தைக் காக்க விரும்புதல் தீமையாம்;
நங்கை கூறும் வியப்புக்கள் கேட்டிரோ! – பாரதியார்.
விவசாயி நிலத்தில் விதைக்கும் போது சில விதை வழியருகே விழுந்தது. இதை பறவைகள் பட்சித்தது. சில விதை கற்பாறையில் விழுந்தது. மண் ஆழமாயிராததினாலே அது சீக்கிரமாய் முளைத்து வெயில் ஏறினபோது தீய்ந்து போய் உலர்ந்து போயிற்று. ஆனால் நல்ல நிலத்தில் விதைக்கப்பட்ட விதையோ முளைத்து நூறு மடங்கு பலன் கொடுக்கும்.
விவிலியத்தில் கூறப்பட்ட இக்கதையின் படி விதை முளைக்கிற இடத்தில் தான் வீரியம் இருக்கிறது. ஆண்கள் வித்தைக் கொடுக்கிறவர்களை மட்டுமே. பெண்களே அதை முளைக்க வைக்கிறார்கள். எனவே பெண்ணைப் பூட்டி வைக்காமல் அறிவாளியாக இருக்க விடு என்கிறார் பாரதியார். குலத்து மாதருக்கு கற்பு இயல்பாகும் என்கிறார்.
சிறை – மதிலும் வாயில் காவலும் முதலாயின.
நிறை – கற்பு நெறியினிறுத்தல்.
பெண்ணைக் காப்பது அவளது நிறையே. பெண் அவளாக நின்று காக்க முடியுமே தவிர ஒரு ஆண்மகனால் அவளைக் காக்க முடியாது. எனவே பெண் ஒழுக்கமுடையவளாய் இருக்க வேண்டும் என்று கருதி அவளைப் பூட்டி வைக்காதே என்கிறார் வள்ளுவர்.
இப்படி இந்தக் குறள் மூலம் பெண் விடுதலைக்கு அன்றைக்கேக் குரல் கொடுத்தார் வள்ளுவர்.
Thank you for writing this article, I really enjoyed reading it