பெற்றாற் பெறின்பெறுவர் பெண்டிர் பெருஞ்சிறப்புப்
புத்தேளிர் வாழும் உலகு.
விளக்கம்;-
இக்குறளில் பெற்றார், பெறுவர் என்ற சொல் அந்தரத்தில் நிற்பதைப் போல இருக்கிறது. இதற்கு பரிமேலழகர் உரைக்குறிப்பிலே விளக்கம் தருகிறார். பெற்றாள் என்று நிற்கிற சொல் ஏதோ ஒன்றை அழைக்கிறது. எதைப் பெற்றாள் என்று கேள்வி வருகிறது. ஆகவே வழிபடப் பெற்றாள் என்பது சொல்லெச்சமாக வருகிறது என்று உரையாசிரியர் விளக்குகிறார். வழிபடுதல் என்ற சொல் இல்லாமல் பெற்றாள் என்ற சொல் பூரணப்படுவதில்லை. எனவே, வழிபடுதல் என்ற சொல் குறளில் இல்லை ஆனால் உரைக்குறிப்பிலே பரிமேலழகர் கூறுகிறார்.
ஒரு பெண் தனது கணவனை வழிபடுவதால் அவளுக்குக் கிடைக்கும் பயன் என்னவென்றால் தேவலோகத்தில் அவளுக்குத் தேவர்களாலே சிறப்புச் செய்யப்படும் என்கிறார் வள்ளுவர்.
இந்த விஷயத்தை நம்மால் இன்றைக்கு நம்பவே முடியாது. ஆனால், கூறுவதோ பொய்யாமொழிப்புலவர். அதுவே ஆகமப்பிரமாணம் நம்பியே ஆக வேண்டும்.
ஒரு பெண் தான் கொண்ட கணவரை தொழுது வாழ்ந்தால் அவளைத் தேவர்கள் தொழுவார்கள் என்கிறார். ஏனென்றால் நல்ல சந்ததியினுடைய விருத்திக்கு அவள் வித்திடுகிறாள்.
ஒரு பெண் (மனைவி) தனது கணவனைத் தொழ வேண்டும். பிள்ளைகள் பெற்றோரைத் தொழ வேண்டும். கற்றறிந்த ஆன்றோர், சான்றோர் நமது வீட்டிற்கு வருகை தந்தால் வீட்டிலுள்ள அனைவரும் அவரை வணங்குதல் வேண்டும். பணிதல் என்பது உயர்வதற்கான ஒரு வழியே. பெரியவர்களின் ஆசியே நமக்குப் பெருவாழ்வை தர வல்லது. நமது கிராமங்களில் இன்றைக்கும் இப்பண்பு படிப்பறிவு இல்லாத பாமர மக்களிடம் இருக்கிறது. இது தமிழர்கள் காலம் காலமாக பின்பற்றி வந்த பண்பாடு.
ஆனால், இன்றைய தலைமுறையினர் இப்படி வணங்குவதை மிகவும் சிக்கலாகவேப் பார்க்கின்றனர். நாம் வணங்குகிற அந்தப் பெரியவர்களுக்குள்ளே இறைவன் இருக்கிறான் என்று நினைத்துவிட்டால் அந்தச் சிக்கல் வராது.
உண்மையாக மனம் நினைந்து பெரியவர்களை வணங்குகிற வழக்கம் இனியாவது நமது வீடுகளிலே வர வேண்டும். இது மிகவும் நல்ல பண்பாகும்.
புத்தேளிர் வாழும் உலகில் சிறப்பு அல்ல பெருஞ்சிறப்புப் பெறுவர் என்கிறார். பெருஞ்சிறப்பு என்று அடை சேர்த்தபடியால் வழிபடுதலின் முக்கியத்துவத்தைப் புரிந்து கொள்ள வேண்டும்.
நல்ல கணவனை வழிபட்டுப் பேணுகிற பெண்ணைத் தேவலோகம் வரவேற்கக் காத்திருக்கிறது.