புகழ்புரிந் தில்லிலோர்க் கில்லை இகழ்வார்முன்
ஏறுபோல் பீடு நடை.
விளக்கம்;-
ஒரு ஆண்மகன் எவ்வளவு பெரிய செல்வந்தனாயிருந்தாலும், மிகப் பெரிய கல்வியறிவைப் பெற்றிருந்தாலும், பெரிய பதவியிலிருந்தாலும், பெரிய புகழ் பெற்றவனாயிருந்தாலும் அவனுக்கு வாய்த்த மனைவி சரியில்லையென்றால் அவனால் வீதியிலே தலை நிமிர்ந்து நடக்க முடியாது.
நமக்கு எதிரானவர்கள் நம் மீது பொறாமை கொள்பவர்கள் இந்த உலகத்தில் எங்கோ ஒரு மூலையில் இருக்கத்தான் செய்வார்கள். இவர்களையே இகழ்வார் என்கிறார் வள்ளுவர். இவர்களே கீழ்மக்கள். இப்படிப்பட்டவர்கள் நம்மை எங்கே வீழ்த்தலாம் என்று சமயம் பார்த்துக் கொண்டேயிருப்பார்கள். இவர்களுக்கு முன்பாக தலை நிமிர்ந்து நடக்க வேண்டுமானால் வீட்டிலே நல்ல பண்புள்ள மனைவி இருக்க வேண்டும். அப்படிப்பட்ட மனைவி மட்டும் வாய்த்து விட்டால் தெருவிலே சிங்கம் போன்று (பெருமைமிகுந்த நடை) நடக்கலாம்.
ஆண்களின் தலைநிமிர்வு மனைவியின் கையில் உள்ளது. இவ்விரண்டு பேரின் ஒற்றுமையால் குடும்பம் நிமிரும்.
புகழ் புரிந்த தில்லோர்க்கில்லை என்றே குறளில் இருக்க வேண்டும். ஆனால் குறளோசைக்காக த என்ற எழுத்தை நீக்கிவிட்டனர். ஆனால் த என்ற எழுத்து இல்லாமல் இல்லை உள்ளே தொக்கி நிற்கிறது (மறைந்து நிற்கிறது).
ஏறு போல் பீடுநடை – சிங்கத்தின் நடையை ஒரு ஆண்மகனின் கம்பீர நடையோடு உவமைப்படுத்துகிறார்.
உவமை என்பது ஒருபுடை ஒப்பு – உவமை ஒரு பகுதியை மட்டுமே விளங்கப்படுத்தும்.
உவமை எப்போதும் பொருளை விடவும் உயர்ந்ததாயிருக்க வேண்டும்.
பெண்கள் சரியில்லையென்றால் ஆண்களுக்கு பீடுநடை இல்லை என்று சொல்வதற்காகவே இக்குறளை வைத்தார் வள்ளுவர்.