அதிகாரம் – 7 – குறள் – 62

இலக்கியம்

எழுபிறப்பும் தீயவை தீண்டா பழிபிறங்காப்

பண்புடை மக்கட் பெறின்.

விளக்கம்;-

எழுபிறப்பு என்பதிலே இரு அர்த்தங்கள் அடங்கியிருக்கிறது.

முதலாவது அர்த்தம்;-

ஒருவனுடைய சாயல் ஏழு தலைமுறைக்குக் கடத்தப்படுகிறது. ஏழாவது தலைமுறையிலே தலைமுறை மாற்றப்பட்டுவிடும். இப்படி ஒருவனுடைய சாயல் ஏழாம் தலைமுறையோடு முடியப்போகிறது. எழுபிறப்பு என்பது ஒருவனுடைய தொடர்ச்சியான அவன் நிலை நிற்கக்கூடிய ஏழு இடங்கள். ஏழுதலை முறை வரைக்கும் இவனுடைய அடையாளம் மற்றும் பண்பு இருக்கும்.

இரண்டாவது அர்த்தம்;-

பிறப்பேழாவன;-

ஊர்வ பதினொன்றா மொன்பது மானுடம்

நீர்ப்பறவை நாற்காலோர் பப்பத்துச் – சீரிய

பந்தமாந் தேவர் பதினா லயன்படைத்த

வந்தமில்சீர்த் தாவரநா லைந்து.

பாடலின் அர்த்தம்;-

ஊர்வன பதினொன்றாம் – பதினோராயிரம் கோடி ஜோனிபேதம்

ஒன்பது மானுடம் – ஒன்பதாயிரம் கோடி ஜோனிபேதம்

நீரிலே வாழ்கிற ஜீவன்கள் – பத்தாயிரம் கோடி ஜோனிபேதம்

பறந்து திரிகற ஜீவன்கள் – பத்தாயிரம் கோடி ஜோனிபேதம்

நான்கு கால்களோடு நடக்கிற ஜீவன்கள் – பத்தாயிரம் கோடி ஜோனிபேதம்

தேவர்கள் பதினான்கு – பதினான்காயிரம் கோடி ஜோனிபேதம்

சீர்தாவரம் – (நான்கு பெருக்கல் ஐந்து) இருபதாயிரம் கோடி ஜோனிபேதம்

11+9+30+14+20 = 84

மொத்தம் எண்பத்திநான்காயிரம் கோடி ஜோனிபேதம் உண்டு. பாடல் அமைப்புக்காக முக்கிய எண்கள் மட்டுமே கூறப்பட்டுள்ளன. ஆயிரத்தையும் கோடியையும் நாம் சேர்க்க வேண்டும். இதுதான் ஏழுவகையான பிறப்பாகும்.

பிறப்பு வகையிலே வேறுபாடுகள் எப்படி வருகிறது என்று பார்க்கலாம். வடிவத்திலும் குணத்திலும் உள்ள பேதங்கள் இருக்கிறது. அமெரிக்கர்கள், சீனர்கள், இந்தியர்கள், தமிழர்கள், காஷ்மீரிகள், பீஹாரிகள், சிங்களர்கள், ஈழத்தமிழர்கள், சென்னைக்காரன், தூத்துக்குடிக்காரன், மதுரைக்காரன், திருநெல்வேலிக்காரன் இப்படி ஒரு நாட்டின் பெயர் ஊர்ப்பெயர் சொன்னாலே அதிலுள்ள வேறுபாடுகளை நாம் கண்டுபிடித்துவிடுவோம். இவைகளே ஜோனிபேதங்களாகும்.

வினைத்தொடர்ச்சி பரம்பரையிலே ஆணுக்குத்தான் உண்டு. வினைப்பயன் தொடர்ச்சி ஆண்பிள்ளைகள் வழியேதான் வருகிறது. இது தொன்றுதொட்டு வரும் நம்பிக்கை. மகன் செய்த நல்லவினைப்பயனால் தந்தை உய்யப்போகிறார். மகன் செய்த தீவினைப்பயனால் தந்தையின் ஆன்மா கஷ்டப்படும். இதையே பழிபிறங்காப் பண்புடை மக்கட் பெறின் என்கிறார். அதாவது பாவத்தைத் தேடாத பண்புடையப் பிள்ளைகளை பெற்றுக்கொண்டால் நல்லது என்கிறார்.

இங்கே ‘பெறின்’ என்பது ஐயக்கருத்தாகும். அதாவது எளிதாக அப்படிப்பட்ட பிள்ளைகளைப் பெற்றுக்கொள்ள முடியாது என்கிறார்.

பண்புடை மக்கட் பெறின் – பண்புடைய பிள்ளைகளைப் பெற்றுவிட்டால் தீயவினை தீண்டாமல் போய்விடுமா? இது கேள்வி.

தீவினை தீண்டாமல் விடுவதற்கு என்ன காரணம் என்றால் இந்த பிள்ளைகள் செய்கிற தானதருமங்கள் தான் காரணம். பிள்ளைகள் பெற்றோர்களை நோக்கிச் செய்கிற தான தருமங்களே காரணம். இந்தத் தான தருமங்களுக்கு என்ன காரணம் என்றால் பண்புதான் காரணம். எனவே இங்கே பண்பு என்று போடப்பட்டச் சொல் பண்பை குறிக்காமல் பண்பினால் செய்யப்படக்கூடிய தருமங்களையேக் குறிக்கிறது.

பெற்றோர்கள் ஈடேறுவதற்குக் காரணம் பிள்ளைகள் செய்யும் தருமக்காரியங்கள்தான். பண்பு காரணம். பண்பினால் விளைவது தானதருமங்களாகிய காரியம் காரணத்திற்கும் காரியத்திற்கும் தொடர்பு இருக்கிறது. காரணத்தைச் சொன்னால் போதும் காரியம் தானாக வந்துவிடும்.

1 thought on “அதிகாரம் – 7 – குறள் – 62

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *