அதிகாரம் – 7 – குறள் – 64

இலக்கியம்

அமிழ்தினும் ஆற்ற இனிதேதம் மக்கள்

சிறுகை அளாவிய கூழ்.

விளக்கம்:-

உவமை ஒரு உண்மையை விளங்கப்படுத்த உதவும்.

கிளி போல பேசினாள்.

குயில் போல பாடினாள்.

உண்மை நிரூபணத்துக்கு உவமையும் ஒரு சான்றாகும். “உவமை என்பது ஒருபுடை ஒப்பே” இது இலக்கணச் சூத்திரம். அதாவது உவமை ஒரு உண்மையினுடைய ஒரு பகுதியை மட்டுமே விளங்கப்படுத்தும். குயில் போலப் பாடினாள் அதாவது அவளது குரல் குயிலின் குரலைப்போல இனிமையுடையது மட்டுமே. குயில் கருப்பு நிறமுடையது. எனவே பாடுகிறவளும் கருப்பாக இருப்பாள் என்று எடுத்துக்கொள்ளக்கூடாது. அடுத்து உவமை எப்போதும் உண்மையை விடச் சிறப்பானதாகவும் இருக்க வேண்டும்.

இக்குறளிலே (மக்கள்) பிள்ளைச் சாப்பிட்டு விட்டு வைத்த மிச்சச் சாப்பாடு அமிழ்தத்தைவிட சிறந்தது என்கிறார் வள்ளுவர். இங்கே அமிழ்தம் என்பது மரபு ரீதியாக சொல்லப்பட்டு வந்ததாலே அது சுவை என்பது நமது மனதிலே பதியப்பட்டுவிட்டது. எனவே உண்மை நிரூபணங்களிலே ஐதீகமும் ஒன்று. (அமிழ்தினும்- அமிழ்த்தை விடவும்) பெற்றோர்களுக்கு மட்டுமே அதன் சுவை தெரிய வாய்ப்புள்ளது.

சிறுகை என்று கூறுவதன் மூலம் இது குழந்தைகளின் கை என்று அறிய வேண்டும்.

“இட்டும் தொட்டும் கவ்வியும் துழந்தும்

நெய்யுடை அடிசில் மெய்பட விதிர்த்தும்”

புறநானூறு – 188 வது பாடல்

இப்பாடல் அடிகளின்படி பிஞ்சுக்குழந்தைகள் இருக்கின்ற வீட்டில் அனைவரும் ஒன்றாக அமர்ந்து சாப்பிடும் போது அப்பா அல்லது அம்மாவின் தட்டிலே சாப்பாட்டை இட்டும் அப்பாவின் தட்டில் உள்ளச் சோற்றை தன் தட்டில் எடுத்துப்போட்டுக்கொண்டும் அப்பாவின் கைகளில் உள்ள சோற்றை வாங்கித் தின்றும் பிசைந்தும் விளையாடும். இதையே சிறுகை அளாவிய கூழ் என்கிறார். இதைப்படிக்கும் போதே இன்பமாக உள்ளது. குழந்தைகள் உள்ள பெற்றோர்களால் மட்டுமே இதை அனுபவிக்க முடியும்.

வாயிலே சாப்பிடுகிற உணவினுடைய ருசி என்பது (தம்மக்கள்) சிறுகுழந்தையினுடைய எச்சிற் கைபட்ட உணவுக்கு நிகரான உணவு பெற்றோருக்குக் கிடையாது.

இக்குறளில் புதல்வரைப்பெறுதலில் வரும் இம்மைப்பயன் பற்றிக்கூறுகிறார். அதற்கு இரண்டு நிபந்தனை விதிக்கிறார்.

தம் மக்கள்:-

பெற்றோருக்குச் சொந்தப் பிள்ளைகளாயிருக்க வேண்டும். அண்டை வீட்டாரின் பிள்ளைகளை வள்ளுவர் கூறவில்லை.

சிறு கை:-

பிஞ்சுக்குழந்தைகளையே வள்ளுவர் கூறுகிறார். ஆகவே சிறு கை என்கிறார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *