மக்கள்மெய் தீண்டல் உடற்கின்பம் மற்றவர்
சொற்கேட்டல் இன்பம் செவிக்கு.
விளக்கம்:-
கடந்த குறளிலே பிள்ளையினுடைய கைதொட்ட உணவு அமிழ்தத்தை விடவும் இனியது என்று கூறினார். இக்குறளிலே பிள்ளையினுடைய உடலைத்தொடுவது உடலுக்குக்கிடைக்கக் கூடிய முதன்மை இன்பம் என்று கூறுகிறார். பிறந்த குழந்தையிலிருந்து இரண்டு வயதுக்குட்பட்ட குழந்தைகளை பார்த்த உடனே கட்டி அணைத்து முத்தமிடத் தூண்டுவது அனைவருக்கும் இயல்பாகும். இதையே மக்கள்மெய்தீண்டல் உடற்கின்பம் என்று கூறுகிறார்.
வினைமாற்று:-
முதலில் உடற்கின்பம் பற்றிச் சொல்லிவிட்டார். அடுத்து செவிக்கு இன்பம் பற்றிக் கூறப்போவதால் வினை மாறப்போகிறது. ஆகவே ‘மற்று’ என்ற சொல் வருகிறது. (இதைப்பற்றி மேற்கண்ட குறள்களில் தெளிவாக எழுதியிருக்கிறேன்)
பச்சைக்குழந்தைகளைத் தொடுவது எப்படி உடலுக்கு உச்ச இன்பமோ அதுபோலவே அவர்களின் சொல்லைக் கேட்பதும் பெற்றோரின் செவிகளுக்கு இன்பமாயிருக்கும். குழந்தைகள் பேச ஆரம்பிக்கும்போது அந்த மழலை வார்த்தைகள் கேட்பதற்கு இன்பமாயிருக்கும் அது புரியவில்லையென்றால் கூட.
ஆனால் வள்ளுவர் இக்குறளில் மழலைச்சொல் என்று கூறவில்லை சொல் என்றே கூறுகிறார். ஏனென்றால் குழந்தைகள் மழலையாகப் பேசும்போதும் மகிழ்ச்சி. வளர்ந்து கற்றறிந்தவர்களான பின்பு பேசும்போதும் அதுவும் பெற்றோருக்கு மகிழ்ச்சியைத்தரும். இதைத்தான் பரிமேலழகர் தனது உரைக்குறிப்பில் மழலைச்சொல் என்று கூறாமல் பொதுப்படச்சொல் என்றே கூறுகிறார் என்கிறார்.
தீண்டல், கேட்டல் என்ற இரு சொற்களும் அவற்றால் வரும் இன்பத்தைக் குறித்தே நிற்கின்றன.
Thank you for writing this article, I really enjoyed reading it