குழலினி தியாழினி தென்பதம் மக்கள்
மழலைச்சொல் கேளா தவர்.
விளக்கம்:-
கடந்த குறளில் பொதுப்படக் கூறியதை இக்குறளிலே சிறப்பு வகையால் கூறுகிறார். ஏனென்றால் குழந்தைகளின் மழலைச் சொல்லைக் கேட்கிற இன்பத்திற்கு நிகரான இன்பமில்லை. அவ்வளவு இனிமைச் சிறப்புடையது.
இயல், இசை, நாடகம் ஆகிய மூன்றும் சேர்ந்தது முத்தமிழ். தமிழினுடைய சிறப்பெழுத்து ழ் – ழகரம். இந்த எழுத்து வேறெந்த மொழிகளிலும் இல்லை. இசைத்தமிழுக்கு தமிழர்கள் மூன்று கருவிகளை எடுத்துக்கொண்டனர்.
- குழல் – காற்று வாத்தியம்
- யாழ் – நரம்பு வாத்தியம்
- முழவு – தோல் வாத்தியம்
காற்று வாத்தியம் – புல்லாங்குழல், நாதஸ்வரம்
நரம்பு வாத்தியம் – வீணை, கிட்டார்
தோல் வாத்தியம் – மிருதங்கம், கொட்டு
இசை படிக்க வேண்டுமென்றால் முதலில் சங்கீத மரபின்படி குரல் சரியாக இருந்தால் சங்கீத வாய்ப்பாட்டையேப் படிக்க வேண்டும். குரல் சரியில்லை அல்லது வரவில்லையென்றால் மட்டுமே இசைக்கருவிகள் வாசிக்கக் கற்றுக்கொள்ள வேண்டும்.
குரல் இல்லாவிட்டால் தான் விரல் – சங்கீதப்பழமொழி.
இப்போது குறளுக்குள் வரலாம். குழலினிது யாழினிது என்பது வாத்தியம். தம்மக்கள் மழலைச்சொல் கேளாதவர் என்பது குரலிசை. எனவே குரலிசைக்கு முன்பதாகவே வாத்திய இசை நிற்காது என்கிறார் வள்ளுவர்.
இந்தக் குரலிசையின் இனிமைக்கு இரண்டு நிபந்தனைகள் விதிக்கிறார் வள்ளுவர்.
- தம் மக்கள் – பெற்றோரின் சொந்தப்பிள்ளைகளாயிருக்க வேண்டும்.
- மழலை – குதலைச் சொற்களைப் பேசும் குழந்தைகளாயிருக்க வேண்டும்.
ஒன்றினுடைய பெயர் இன்னொன்றுக்கு ஆகிவருவது ஆகுபெயர். குழல், யாழ் போன்றவை இசையைக் குறித்து நிற்கின்றன எனவே ஆகுபெயர்.
தன் பிள்ளைகளின் குரலினிமையைக் கேட்டவர் குழல், யாழ் போன்றவற்றின் இசையை விட இனிது என்று சொல்லுகிறபடியால் இது குறிப்பெச்சம்.
இந்த மூன்று குறள்களிலும் புதல்வரைப் பெறுவதால் வரும் இம்மைப்பயன் பற்றிக் கூறினார்.