அதிகாரம் – 7 – குறள் – 68

இலக்கியம்

தம்மின்தம் மக்கள் அறிவுடைமை மாநிலத்து

மன்னுயிர்க் கெல்லாம் இனிது.

விளக்கம்:-

பேசாதிருந்தால் மூடனும் ஞானவான் என்று எண்ணப்படுவான்; தன் உதடுகளை மூடுகிறவன் புத்திமான் என்று எண்ணப்படுவான் – நீதிமொழிகள் 17.28

கல்லாதவனும் நனிநல்லன் என்கிறார் வள்ளுவர்.

கற்றார்முன் சொல்லாதிருக்கப் பெறின்.

ஞானிகளுக்கு இலட்சணமே அதிகம் பேசாதிருக்க வேண்டும். தாமஸ் ஆல்வா எடிசன், நியூட்டன், ஐன்ஸ்டீன் போன்றோர் மிகப்பெரிய விஞ்ஞானிகள் அவர்களது கண்டுபிடிப்புகளால் இந்த உலகம் இன்றைக்கு ஆசீர்வாதமாயிருக்கிறது. அனுதின வாழ்க்கைக்கு அவர்களது கண்டுபிடிப்புகள் எத்தனை தேவையாக இருக்கிறது.

இதுபோலவே பிள்ளைகள் அறிவாளிகளாக இருந்தால் உலகம் மகிழும்.

தம் மக்கள் அறிவுடைமை – தம் மக்களது அறிவுடைமை.

மா நிலத்து மன் உயிர்க்கெல்லாம் தம்மின் இனிது – பெரிய நிலத்து மன்னாநின்ற உயிர்கட்கெல்லாம் தம்மினுமினிதாம்.

அறிவு என்ற சொல்லுக்கு கல்வி என்று பொருள் கொள்ளக்கூடாது. கல்வியால் பெறப்படுவது அறிவு. அறிவு பெறப்பட்ட பின்பு கல்விக்கு வேலையில்லை.

முதல் குறளிலே நாம் பார்த்தது போல ஒவ்வொருவரும் பிறக்கிறபோதே ஒரு அறிவைக்கொண்டு வருகிறோம். ஒவ்வொருவரிடமும் அது வேறுபட்டிருக்கும். படிக்கின்ற நூல் ஒன்றே ஆனாலும் அதனைப் புரிந்து கொள்ளும் விதமும், கண்ணோட்டமும் ஒவ்வொருவருக்கும் வேறுபடும். அதனால்தான் வள்ளுவரும் கல்வி என்று ஒரு அதிகாரமும் அறிவுடைமை என்ற அதிகாரமும் வைத்துள்ளார்.

இப்படியிருக்கிறபடியால் தான் நாம் எவ்வளவு நூல்களைப் படித்தாலும் நாம் பிறக்கும் போது கொண்டு வந்த அறிவே இந்த நூல்களில் பிரதிபலிக்கும்.

நுண்ணிய நூல்பல கற்பினும் மற்றுந்தன்

உண்மை யறிவே மிகும்.

இயல்பறிவும் நூலறிவும் இருந்தால் மட்டுமே அது முழுமையான அறிவாகும்.

மதிநுட்பம் நூலோடு உடையார்க்கு அதிநுட்பம்

யாவுள முன்நிற் பவை.

ஒரு விடயத்தை நுட்பமாகச் சொல்வதோடு அதனை நிரூபிக்கவும் தெரிந்திருக்க வேண்டும். நிரூபிக்க வேண்டுமானால் மேற்கோள் காட்ட வேண்டும். மேற்கோள் காட்டுவதற்கு கல்வியால் பெறப்படும் அறிவு இன்றியமையாதது.

இதையே பரிமேலழகர் பின்வருமாறு கூறுகிறார்.

ஈண்டறிவென்பது இயல்பாகிய அறிவோடு கூடிய கல்வியறிவினை.

மன்னுயிரென்றது ஈண்டறிவுடையார் மேனின்றது. அறிவுடைமை கண்டின்புறுதற்கு உரியார் அவராகலின். இதனால் தந்தையினும் அவையத்தாருவப்பரென்பது கூறப்பட்டது.

மன்னுயிரென்றது ஈண்டறிவுடையார் மேனின்றது – மன்னுயிர் – நிலைத்த உயிர் என்று எல்லா உயிர்களையும் கூறாமல் அறிவுடையாரைக் கூறுகிறார். அறிவாளியை அறிவாளியால் மட்டுமே இனம் காண முடியும்.

அறிவாளி அறிவாளியைப் பார்த்து மகிழ்ச்சியடைய வேண்டுமே தவிர பொறாமை கொள்ளக்கூடாது. அறிவுலகத்திலே மாணவர்கள் கல்வி கற்றுத்தேறுவதைப் பார்த்து ஆசிரியர்கள் மகிழ்ச்சியடைய வேண்டும்.

சீஷன் தன் குருவுக்கு மேற்பட்டவனல்ல, தேறினவன் எவனும் தன் குருவைப்போல இருப்பான். லூக்கா 6.40 (கிறித்தவ மறைநூல்)

இப்படி (பிள்ளை) மாணவன் அறிவாளியாக வளர்ந்து வந்தால் தந்தை மட்டுமல்ல அவையமும் (உலகமும்) மகிழும்.

தந்தையை விட அறிவுடைய அவையத்தார் அறிவாளி மகனைப் பார்த்து மகிழ்ச்சியடைவர் என்று இக்குறளின் மூலம் கூறுகிறார் வள்ளுவர்.

1 thought on “அதிகாரம் – 7 – குறள் – 68

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *