அதிகாரம் – 7 – குறள் – 69

இலக்கியம்

ஈன்ற பொழுதின் பெரிதுவக்கும் தன்மகனைச்

சான்றோன் எனக்கேட்ட தாய்.

விளக்கம்:-

பெண்களுக்குப் பிரசவ வேதனை என்பது மிகப்பெரிய வலியாகும். வலிகளின் உச்சமே பிரசவ வலி. இந்த வலியைத் தாங்கிக் கொண்டுதான் பெண்கள் பிள்ளைகளைப் பெற்றெடுக்கின்றனர்.

யாராவது ஒருவர் நமக்குத் தாங்க முடியாத வலிகளைக் கொடுத்தால் அதற்குப் பழிக்குப் பழி வாங்குவது மனித இயல்பு. ஆனால், பிரசவ வலியைத் தாங்கிய பெண் குழந்தை பிறந்தவுடன் அதை நினைத்து ஆனந்தமடைகிறாள். இதுவே தாய்மை.

கிறித்தவ மறைநூல் இதையே இப்படிக் கூறுகிறது.

ஸ்திரீயானவளுக்குப் பிரசவகாலம் வந்திருக்கும்போது அவள் துக்கமடைகிறாள்; பிள்ளைபெற்றவுடனே ஒரு மனிதன் உலகத்தில் பிறந்தானென்கிற சந்தோஷத்தினால் அப்புறம் உபத்திரவத்தை நினையாள். யோவான் 16.21

உதாரணம்:-

இருவாச்சிப்பறவை முட்டையிட்டுக் குஞ்சு பொறிப்பதற்காகத் தன்னைத்தானே சிறைப்படுத்திக்கொள்ளும் என்று பறவையியல் வல்லுநர்கள் கூறுகின்றனர். தாய்மையின் முக்கியத்துவம் பறவைகளுக்கும் தெரிகிறது.

கீழ்க்கண்ட காணொலியின் மூலம் தெரிந்து கொள்ளலாம்.

குழந்தை பிறந்தவுடன் தாய் உவப்பாள் (சந்தோஷப்படுவாள்). அதை விடவும் பெரிய உவப்பு (சந்தோஷம்) ஒன்று இருக்கிறது என்கிறார் வள்ளுவர். பிள்ளை வளர்ந்து பெரியனாகி கல்வி கேள்விகளில் சிறந்து விளங்கி ஒரு உயரத்திற்கு வரும்போது கற்றறிந்த பெரியவர்கள் சான்றோன் எனக் கூறுவதைக் கேட்கின்ற தாய் பெரிதும் உவப்பாள் (சந்தோஷப்படுவாள்).

இந்தச் சான்றோன் என்பவர் யார்?

தமிழரின் கல்வி மரபின்படி நன்கு படித்தவரைக் கல்வியாளன் என்பர். அதைவிடப் படித்தவரை அறிவாளி என்பர். அதைவிடப் படித்தவரை புலமையாளன் என்பர். இதற்கும் மேலாகப் படித்தவரை கவிஞன் என்பர். கவிஞன் – அறிவாளிகளுக்குள் சிறந்தவர். இதற்கும் மேற்பட்டவரையே சான்றோன் என்பர். ஆகவேதான் இந்தச் சான்றோன் என்றச் சொல்லையே தாய் கேட்கும் போது அவள் பெரிதும் உவப்பாள்(சந்தோஷப்படுவாள்).

இப்படிப்பட்டச் சான்றோன் ஆகிவிட்ட பிள்ளையே ஆனாலும் தாய்க்குப் பிள்ளை பிள்ளைதான். ஊராரும் தகப்பன் உள்ளிட்டவரும் பிள்ளையை மரியாதையாக பார்த்தாலும் தாயானவள் பாலூட்டிச் சீராட்டி வளர்த்தப் பிள்ளையாகவே பார்ப்பாள். இதுவே பெண்ணின் இயல்பாகும்.

தந்தையின் உவகையை விட தாயின் உவகை பெரியது என்பதைக் கூறுவதற்காக தனியே ஒரு குறள் வைத்தார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *