அன்பிலார் எல்லாம் தமக்குரியர் அன்புடையார்
என்பும் உரியர் பிறர்க்கு.
விளக்கம்:-
முதல் குறளிலே அன்புக்குப் பிரமாணம் சொன்னார். இரண்டாவது குறளிலே அன்புள்ளவனுக்குப் பிரமாணம் சொல்லுகிறார். அன்பின் அடையாளம் கொடுப்பது. இதுவே தானம். இந்த தானம் தான் இல்லறத்தின் அடையாளம். இல்லறத்திலே அன்பு வளர்வதற்குச் சான்று நம்முடையதை மற்றவருக்குக் கொடுப்பதே.
இதற்கு உதாரணமாகப் பெண்களை எடுத்துக்கொள்ளலாம். பெண்கள் தன்னிடம் இருக்கும் விலையுயர்ந்த தங்க ஆபரணங்களை தனக்கு என்றே வைத்துக்கொள்வார்கள். அதை மற்றவருக்கு மனப்பூர்வமாகக் கொடுப்பதற்கு அன்பு வரவேண்டும்.
அன்பிலார் எல்லாம் தமக்கு உரியர் – அன்பிலாதார் பிறர்க்குப் பயன்படாமையின் எல்லாப் பொருளானுந் தமக்கேயுரியர்; அன்புடையார் என்பும் பிறர்க்கு உரியர் – அன்பு உடையார், அவற்றானேயன்றித் தம் உடம்பானும் பிறர்க்குரியர்.
பொருளானும், உடம்பானும் – இதில் வருகின்ற ஆன் உருபுகள் குறளுக்குள்ளே மறைந்திருக்கின்றன.
அதே போல அன்பிலார் எல்லாம் தமக்குரியர் என்பது தமக்கே உரியர் என்று வரவேண்டும். தமக்கே – இது பிரிநிலை ஏகாரம். இதுவும் மறைந்து நிற்கிறது.
அன்புடையார் என்பும் உரியர் பிறர்க்கு – என்பும் என்பது எலும்பு அல்ல. எலும்பினால் ஆகிய உடம்பு. ஆகவே ஒன்றின் பெயர் மற்றொன்றுக்கு ஆகிவருவது ஆகுபெயர்.
“தன்னகம் புக்க குறுநடைப் புறாவின் தபுதி யஞ்சிச் சீரை புக்கோன்” – புறநானூறு 43
இக்குறளுக்கு உதாரணமாகப் புறநானுறு கூறும் சிபிச்சக்கரவர்த்தியின் ஈகைத்தன்மையைப் பரிமேலழகர் கூறுகிறார்.
இப்புராணக் கதைப்படி கழுகாக இந்திரனும் புறாவாக தர்மதேவதையும் வந்தார்களாம். கதைப்படிக் கழுகு புறாவைத் துரத்துகிறது. புறா சிபிச்சக்கரவர்த்தியிடம் அடைக்கலம் கேட்டு அவரது மடியிலே வந்து விழுகிறது. கழுகோ துரத்திக்கொண்டே வருகிறது. மன்னனைப்பார்த்துப் புறாவை வேட்டையாடி உண்பது எனது இயல்பு ஆகவே புறாவை தன்னிடம் கொடுத்துவிடக் கேட்கிறது.
மன்னனோ என்னிடம் அடைக்கலம் வந்துவிட்ட படியினால் புறாவைத் தர முடியாது என்கிறார். அதற்கு ஈடாகத் தன் தசையை அரிந்து வைக்கிறார்.
இப்படி வரலாற்றிலிருந்து அன்புக்கு உதாரணமாக நிறையச் சான்றுகளைக் கூறலாம்.