அன்போ டியைந்த வழக்கென்ப ஆருயிர்க்கு
என்போ டியைந்த தொடர்பு.
விளக்கம்:-
உடம்போடு உயிர் ஏன் சேர்ந்தது? என்ற கேள்வி இக்குறளில் வருகிறது. உயிர் என்பது அறிவுப்பொருள். உடம்பு என்பது அறிவில் பொருள். மனித உடல் பஞ்ச பூதங்களின் சேர்க்கையாகும். இந்தப் பஞ்ச பூதங்கள் இயக்கினால் மட்டுமே இயங்கும். அதுபோலவே உயிருக்கு அன்பு என்பது இயல்பு. ஆனால் அன்பின் இயல்பை உயிரால் செய்ய முடியாது. அன்பை வெளிப்படுத்துவதற்கு உடல் தேவை. எனவே இப்பிறவியின் நோக்கம் அன்பு செய்தலாகும்.
ஆர் உயிர்க்கு என்போடு இயைந்த தொடர்பு – பெறுதற்கு அரிய மக்களுயிர்க்கு உடம்போடுண்டாகிய தொடர்ச்சியினை.
ஆருயிர் – அருமையான உயிர் என்று வள்ளுவர் கூறிவிட்டார். ஆனால் பெறுவதற்கு அரிதானது உயிரல்ல மானுடல் தான் என்று பரிமேலழகர் கூறுகிறார். உயிர் பொதுவானது. விலங்குகளுக்கும், பறவைகளுக்கும், புழு பூச்சிகளுக்கும் உயிர் உண்டு. ஆனால் மனித உடல் மிகவும் சிறப்பானது. ஆகவேதான் மனித உடலுக்குச் சொல்லப்பட்ட அருமையை உயிர் மீது ஏற்றிக் கூறுகிறார் வள்ளுவர். பிறப்பினது அருமை பிறந்த உயிர் மேல் ஏற்றப்பட்டது. நாம் இப்படியாகப் பொருள் கொள்ள வேண்டும் என்கிறார் பரிமேலழகர்.
அன்போடு இயைந்த வழக்கு என்ப – அன்போடு பொருந்துதற்கு வந்த நெறியின் பயனென்று சொல்லுவர் அறிந்தோர்.
இயைந்த என்பதற்கு பொருந்திய என்று கூறாமல் பொருந்துதற்கு வந்த நெறியின் பயன் என்று கூறுகிறபடியால் இது உபசாரம். இதே போல வழக்கு என்பதும் நெறியின் பயன். ஒன்று இன்னொன்றுக்கு ஆகிவருவது ஆகுபெயர்.
உடம்போடு உயிர் பொருந்தி வந்ததே அன்பு செய்வதற்காகத்தான். ஆகவே அன்பு செய்யத் தவறும்போது வந்த நோக்கம் இழந்ததாகிவிடும். உடம்பும் உயிரும் சேர்வதான அந்தத் தொடர்ச்சிக்குப் பயன் அன்பு செய்வதே என்பதாயிற்று.